100 பேரிடம் தலா ரூ.3 லட்சம் வசூல் வேட்டை..! சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டில் திமுக ஒ.செ-க்கள் தில்லுமுல்லு..!

Published : Feb 05, 2026, 10:59 PM IST

பணம் கொடுத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சமத்துவபுர வீடுகள் முறையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், நில,புலம் உள்ளவர்களுக்கு தேர்வு செய்து விட்டார்கள். முழுக்க முழுக்க பணத்தை வைத்து வீடுகளை ஒதுக்கி உள்ளார்கள்.

PREV
14
திமுக ஒன்றிய செயலாளர்கள் மீது பகீர் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மங்கம்பட்டி, தளுகை, சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே தண்ணீர் பந்தல் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 140 வீடுகள் கட்டி தயாராக உள்ளன. இதில் ஒரு வீடு ஒதுக்குவதற்கு என 100 வீடுகளுக்கும் தலா ரூ.3 லட்சம் வாங்கி விட்டார்கள் என திமுக ஒன்றிய செயலாளர்கள் மீது பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘‘முதலில் ரூ.1 லட்சம் கேட்டார்கள். பின்னர் ரூ.2 லட்சம் என்றார்கள். கடைசியாக ரூ5 லட்சம் வரை கேட்டார்கள்’’ என குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில் அந்தத் திட்டத்தில்பெயர் இல்லாதவர்கள், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், பெண் ஒருவர் கட்டுக் கட்டாக பணத்துடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. போராட்டம் கைவிடப்பட்டது

24
பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் வீடுகளை ஒதுக்கீடு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தமிழக அரசு எங்கள் தொகுதியில் சமத்துவபுரம் ஆரம்பித்தது. அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வீடுகளை ஒதுக்காமல், வெறும் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் வீடுகளை ஒதுக்கி உள்ளார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டரை லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை சம்மந்தப்பட்ட ஒன்றிய செயலாளர்களான உப்பிலியாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம், உப்பிலியாபுரம் தெற்கு ஒன்றியசெயலாளர் அசோகன் ஆகிய இருவரும் பணம் வசூலில் ஈடுபட்னர். ஆனால், பணம் கொடுத்த அனைவருக்கும் இவர்களால் வீடுகளை ஒதுக்கி தர முடியவில்லை.

பணம் கொடுத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சமத்துவபுர வீடுகள் முறையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், நில,புலம் உள்ளவர்களுக்கு தேர்வு செய்து விட்டார்கள். முழுக்க முழுக்க பணத்தை வைத்து வீடுகளை ஒதுக்கி உள்ளார்கள். இரண்டு ஒன்றிய செயலாளர்களும் சர்வாதிகாரிகள் போல் செயல்படுகிறார்கள். அவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. கேட்டால் அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பி அருண் நேரு எங்களுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். எங்களை எதுவும் செய்ய முடியாது. அசைக்க முடியாது. நான் வைத்தது தான் சட்டம் என்கிறார்கள்.

34
வெள்ளைக்காரர்களிடம் இருந்துகூட மீண்டு விட்டோம்

இந்த பகுதியில் உள்ள அத்தனை ஏரி, குளத்திலும் கனிம வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையில் ஒருவரும் ஏன் என்று கேட்க மாட்டேன் என்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. கேட்டால் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். பிடிஓக்களை போய் அடிக்கிறார்கள். எல்லா வேலைகளிலும் டெண்டர் எடுத்து முறைகேடு செய்கிறார்கள். போர் போட்டால் புதிய மோட்டாரை இறக்குவதில்லை. பழைய மோட்டார்களை இறக்கி பணம் பார்க்கிறார்கள். நாங்கள் வெள்ளைக்காரர்களிடம் இருந்துகூட மீண்டு விட்டோம். இந்த இரண்டு ஒன்றிய செயலாளர்களிடம் இருந்து மீள முடியவில்லை.

தேவேந்திரகுல சமுதாயம், ஆதிதிராவிட சமுதாயங்களை சுத்தமாக ஒதுக்கிகிறார்கள். உண்மையான பயணிகளுக்கு சமத்துவத்தில் வீடுகள் போய் சேர வேண்டும். 100 வீடுகளுக்கு இரண்டரை டு மூன்று லட்சம் வரை வசூல் பண்ணி வீடுகளை ஒதுக்கி உள்ளார்கள்’’ என்று குமுறுகிறார்கள்.

44
ராஜினாமா கடிதத்தை அறிவாலயத்துக்கு அனுப்பி வையுங்கள்

இதுகுறித்து குற்றச்சாட்டப்படும் உப்பிலியாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வனிடம் விளக்கம் கேட்டோம். “900 பேர் விண்ணப்பம் கொடுத்திருந்தார்கள். நூறு வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 பேர் வீடு கிடைக்காதவர்கள். அவர்கள் குறை தானே சொல்வார்கள். ஒரு பெண் பணத்தோடு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தப் பணமே பால்காரன் பணம். அதையெல்லாம் நேற்றைய விசாரித்து விட்டார்கள். நான் அவர்கள் சொல்வது போல 100 ரூபாய் கூட யாரிடமும் வாங்கவில்லை. அங்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 வீடுகளில் யாராவது ஒருவரிடம் ஒன்றிய செயலாளர் பணம் வாங்கி விட்டார் என்று சொன்னால் நான் பதவியை விட்டு விலகுகிறேன்.

வீடு கிடைக்காதவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அதாவது பணம் வாங்கி விட்டார்கள் என்று நேருக்கு நேர் சொன்னால் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதற்கு நான் பத்திரம் கூட எழுதித் தருகிறேன். விண்ணப்பம் அளித்த அனைவருமே தகுதியான பயனாளிகள்தான். அதில் ஒன்று, இரண்டு தப்பாய் இருக்கலாம். அதில் மாற்று கருத்து இல்லை. அரசு அதிகாரிகள் அதில் ஒன்றிரண்டை தவறாக எடுத்திருக்கலாம். ஆனால், 99 சதவிகிதம் அந்த பயனாளிகள் தகுதியானவர்கள். நானும், அசோகனும் யாரிடம் இருந்தாவது பணம் வாங்கிக் கொண்டு வீடு ஒதுக்கினோம் என்று சொல்லி இருந்தால் இப்போது வாருங்கள். நாங்கள் கையெழுத்து போட்டு கொடுக்கிறோம். அதற்கு பிறகு போய் விசாரியுங்கள். விசாரித்த ஆட்களோடு வாருங்கள். ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறேன். நீங்களே அறிவாலயத்துக்கு அனுப்பி வையுங்கள். இதைவிட நான் வேறு என்ன செய்ய முடியும்?’’ என்கிறார்.

நெருப்பில்லாமல் புகையுமா..?

Read more Photos on
click me!

Recommended Stories