சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் அமலாக்கத்துறையின் அதிரடி ஆரம்பமாகும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அப்துல் வஹாப் ஆடியோ வெளியாகி தி.மு.க. தலைமைக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்வேறு குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் திமுகவைச் சேர்ந்த பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வஹாப் மீது சூழ்ந்து வருகின்றன. உள்கட்சி மோதல்கள், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் அதிகார தலையீடு, நெல்லை மாநகராட்சியில் மேயர் சரவணன் உட்பட பலருடன் மோதல் என அப்துல் வஹாப் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். இடனால் வெறுத்துப்போன திமுக தலைமை 2023-ல் அவரை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து தூக்கியடித்தது. ஆனாலும், அவரது அடாவடிகள் அடங்கவில்லை. ஒரு பெண் அப்துல் வஹாப் தனது நிலத்தை ஏமாற்றியதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு புகார் எழுந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை குற்றம் சுமத்தி அனுப்பியதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பின் வாட்ஸ்ஆப் ஆதாரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. நகராட்சி அதிகாரிகள் 43 பேரிடம் இருந்து தலா ஒரு லட்ச ரூபாயை அவர் வசூல் செய்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக இந்த நிதி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.