பீகார் தேர்தலுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி தங்களது பேர வலிமையை இழந்து இருக்கிறார்கள். அதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்துகிறது. ஒரு பெரிய இன்னொரு அபாய சிக்கல் என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் பொழுது, அது எந்தவிதமான பலனை அளிக்கிறது என்பதை இந்த தேர்தல் உணர்த்திருக்கிறது. தமிழக தேர்தலை பொருத்தவரை பீகார் தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தலாம் என எண்ணிக்கொண்டு இருந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. ஒருவேளை திமுகவிடம் அதிக தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் காங்கிரஸ் தவெக பக்கம் செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் எல்லா கட்சியும் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதை தாண்டி, காங்கிரஸ் கட்சி பலம் இழந்து விட்டதாக நினைக்கின்றனர்.
இப்போது தவெக பக்கம் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரலாம் என்கிற எண்ணமும் தவிடு பொடியாகி இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் விழாவிற்கு பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தார்கள். அவர் ஒரு பெரிய தேர்தல் வியூக வகுப்பாளர். கிட்டத்தட்ட இந்தியாவை ஆளுகின்ற கட்சிகளுக்கும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிற கட்சிக்கும் தேர்தல் வேலைகளை ஆரம்ப காலகட்டத்தில் பார்த்தவர். அப்படிப்பட்டவரை ஒரு செய்தியை சொல்வதற்காக தான் தவெக அழைத்து வந்தது. இப்போது அவரது நிலைமை பீகாரில் ஜன் சுராஜ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. காங்கிரஸார் அந்த இடத்தையும் இப்போது ஆலோசிப்பார்கள்.