மாபெரும் எதிர்காலம் என பாஜக தலைமை ஆசை காட்டியும் செந்தில் பாலாஜி அதற்கு அசைந்து கொடுக்காமல் உறுதிகாட்டி வருகிறார். இதனால் அவருக்கு எதிராக மீண்டும் சட்ட அஸ்திரங்களை ஏவலாமா என தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக தலைமை.
2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற திமுகவின் தலைமை நிலைய புள்ளிகள் தொடங்கி, பூத் லெவல் ஏஜென்ட்கள் வரை மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக, விசாரணை அமைப்புகள் மூலம் திமுகவின் செயல்பாடுகளை முடக்கத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் பட்டியல் கையில் உள்ளது. யார் உள்ள போகிறார்கள், யார் வெளியே போகிறார்கள் என்பதை விரைவில் தெரிந்துகொள்ளலாம். டெல்லியைப் போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு வருட காலமாக சிறையில் இருந்து நிலையில், நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகே வெளியே வந்தார்.
24
திமுக அமைச்சர்களுக்கு குறி
அமைச்சர் நேரு குடும்பத்தை சுற்றி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல் அமைச்சர் துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் தொடர்பான சோதனைகளும் நடைபெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கிலும் நடந்துவரும் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக பேசப்படும் விஷயங்களாக மாறியுள்ளன. ஏற்கனவே 2025-ல் அமலாக்கத்துறை சில திமுக அமைச்சர்களான ஐ.பெரியசாமி, கே.என் நேரு தொடர்புடையவர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தியது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும் விசாரணைகள் நடந்தன.
மேலும், சில திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் உள்ளிட்ட விசாரணைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணைகள் தேர்தல் காலத்தை நெருங்கும் போது தீவிரப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பாஜக தலைவர்கள் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித் ஷா சமீபத்தில், புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் திமுக அரசை "நாட்டிலேயே அதிக ஊழல் செய்யும் அரசு" என்று குற்றம்சாட்டினார். அவர், திமுக அமைச்சர்கள் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன என்றும், 20% கமிஷன் விதி நடப்பதாகவும் கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுகவினர் 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாகக் கூறி பட்டியலை வழகி உள்ளார்.
34
செந்தில் பாலாஜிக்கு அழுத்தம்
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு 60 தொகுதிகளை மேற்பார்வையிட திமுக பொறுப்பை வழங்கி உள்ளது. அவர் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் தயாரிப்புகளை முன்னெடுத்து வருகிறார். தேர்தல் வியூகங்களை வகுப்பதில் கில்லாடியாகப் பார்க்கப்படும் செந்தில் பாலாஜியை டெல்லி தரப்பு ஏற்கெனவே வழக்குகளைப்போட்டு மிரட்டிப் பார்த்தது. கைது நடவடிக்கைகளை பாய்ச்சியபோது திமுக அரசுக்கு எதிரான ஆதாரங்களைக் கேட்டு டார்ச்சர் பண்ணிப் பார்த்தது. வழக்குகளை உடைத்து செந்தில் பாலாஜி வெளியே வந்தபோது, இணக்கமான ரூட்டில் பேசித் தங்கள் கட்சிக்கே வரச் சொல்லி அழுத்தம் கொடுத்தது. ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்காமல் முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொண்டார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில் சமீபகாலமாக மறுபடியும் பாஜக மேலிடம் செந்தில் பாலாஜியை நெருக்கத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. மாபெரும் எதிர்காலம் என பாஜக தலைமை ஆசை காட்டியும் செந்தில் பாலாஜி அதற்கு அசைந்து கொடுக்காமல் உறுதிகாட்டி வருகிறார். இதனால் அவருக்கு எதிராக மீண்டும் சட்ட அஸ்திரங்களை ஏவலாமா என தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக தலைமை.
இந்நிலையில், பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்திக்க சென்றார் எடப்பாடி பழனிசாமி. அப்போது முன்னாள் அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கரையும் உடன் அழைத்துச் சென்றார். செந்தில் பாலாஜியின் பரம எதிரி இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். செந்தில் பாலாஜிக்கு எதிராக பல தகவல்களை திரட்டி வைத்திருப்பவர். இந்நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பில் ஈபிஎஸுடன் கரூர் அதிமுகவின் முக்கியப் பிரமுகரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்றது, செந்தில் பாலாஜிக்கு நல்ல செய்தி அல்ல. ஏதோ முக்கியமான ஒன்று நடந்து கொண்டிருக்கிறது’’ என்கிறார்கள்.