போடியில் ஓ.பி.எஸை பொடிப்பொடியாக்க ஸ்கெட்ச்..! அதிமுகவின் 'மிஸ்ரா' அஸ்திரம் - தேனியில் அதிரும் அரசியல் களம்!

Published : Mar 18, 2026, 09:06 PM IST

அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி, ஓ.பி.எஸ் மீதான அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் மற்றும் மிஸ்ராவின் சமூக வாக்குகள் ஆகியவற்றை ஒன்றிணைத்தால் 'வெற்றி நிச்சயம்' என்பது இ.பி.எஸ் டீமின் கணக்கு.

PREV
14
ஓ.பி.எஸுக்கு எடப்பாடி ஸ்கெட்ச்

தமிழக அரசியலில் 'கோட்டை' என்று வர்ணிக்கப்படும் தேனி மாவட்டம், தற்போது ஒரு பிரம்மாண்டமான சதுரங்க ஆட்டக்களமாக மாறியுள்ளது. குறிப்பாக, போடிநாயக்கனூர் தொகுதியில் அரங்கேறவிருக்கும் அதிகாரப் போட்டி, ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. ஒரு காலத்தில் அதிமுகவின் அச்சாணியாகத் திகழ்ந்த ஓ.பி.எஸ், இப்போது திமுக முகாமில் களம் காண்பது, அவரது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

அதே சமயம், "சொந்த மண்ணிலேயே ஓ.பி.எஸ்-ஸின் அரசியல் அத்தியாயத்தை முடிக்க வேண்டும்" என்ற ஒற்றை இலக்கோடு எடப்பாடி பழனிசாமி தரப்பு இறக்கியிருக்கும் புதிய அஸ்திரம் தான் பி.எல்.ஏ. ஜெகனாத் மிஸ்ரா. அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பிறகு, ஓ.பி.எஸ் தனது அரசியல் எதிர்காலத்திற்காக திமுக முகாமுடன் கைகோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. "தனது சொந்த மண்ணில் தன்னை எவராலும் அசைக்க முடியாது" என்ற அதீத நம்பிக்கையில் ஓ.பி.எஸ் களம் காணத் தயாராகி வருகிறார். ஆனால், அவரது அரசியல் செல்வாக்கை அவரது சொந்தத் தொகுதியிலேயே வேரறுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகத் தெளிவான 'ஸ்கெட்ச்' போட்டுள்ளது.

24
யார் இந்த பி.எல்.ஏ. ஜெகனாத் மிஸ்ரா?

ஓ.பி.எஸ் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதியை வீழ்த்த வெறும் அரசியல் அனுபவம் மட்டும் போதாது. அசுரத்தனமான பணபலமும், சமூக செல்வாக்கும் கொண்ட ஒரு வேட்பாளர் தேவை என்பதே அதிமுகவின் கணக்கு. அந்தத் தேடலில் அதிமுக தலைமைக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு தான் பி.எல்.ஏ. ஜெகனாத் மிஸ்ரா. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற தங்க நகை கடன் நிறுவனம், நிதி நிறுவனங்களை நடத்தி வரும் பெரும் தொழிலதிபர். நமது மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருபவர். போடி பகுதியில் கணிசமாக வாழும் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது இவருக்கு கூடுதல் பலம்.

34
கைநழுவிய திமுக வாய்ப்பு

தொடக்கத்தில், ஜெகனாத் மிஸ்ராவை திமுக பக்கம் இழுக்க தங்க தமிழ்ச்செல்வன் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், எதிர்பாராத திருப்பமாக ஓ.பி.எஸ்-ஸே திமுக ஆதரவு நிலையை எடுத்ததால், மிஸ்ராவின் திமுக பிரவேசம் தள்ளிப்போனது. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இ.பி.எஸ் தரப்பு, மின்னல் வேகத்தில் மிஸ்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அதிமுக பக்கம் இழுத்துள்ளது. "வாய்ப்பு கொடுத்தால் ஓ.பி.எஸ்-ஸை அவரது கோட்டையிலேயே வீழ்த்திக் காட்டுகிறேன்" என மிஸ்ரா விடுத்த சவால், அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

44
போடி தொகுதியின் 'தகிடு தகிடு' வியூகம்

ஓ.பி.எஸ்-க்கு இருக்கும் ஒரே பலம் அவரது நீண்டகால அரசியல் தொடர்புகளும், போடி மக்களுடனான தனிப்பட்ட உறவும்தான். ஆனால், மிஸ்ரா போன்ற ஒரு 'கார்ப்பரேட்' லெவல் வேட்பாளர் களமிறங்கும்போது, தேர்தல் செலவினங்களில் அதிமுகவின் கை ஓங்கும். அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி, ஓ.பி.எஸ் மீதான அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் மற்றும் மிஸ்ராவின் சமூக வாக்குகள் ஆகியவற்றை ஒன்றிணைத்தால் 'வெற்றி நிச்சயம்' என்பது இ.பி.எஸ் டீமின் கணக்கு.

ஒரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்தவர்கள் இன்று எதிரும் புதிருமாக நிற்கிறார்கள். இவர்களுக்கு இடையே புகுந்துள்ள இந்த 'மிஸ்ரா' அஸ்திரம் ஓ.பி.எஸ்-ஸின் கோட்டையைத் தகர்க்குமா? அல்லது தனது அரசியல் சாணக்கியத்தனத்தால் ஓ.பி.எஸ் இந்தச் சோதனையைக் கடப்பாரா? எது எப்படியோ, போடி நாயக்கனூர் தொகுதி இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தச் சதுரங்க ஆட்டத்தில் இன்னும் பல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்!

Read more Photos on
click me!

Recommended Stories