உலகின் மிக விலையுயர்ந்த அரிசி என்ற பெருமையை பெற்றிருப்பது ஜப்பானில் விளையும் Kinemai Premium Rice ஆகும். இந்த அரிசி அதன் உயர்ந்த தரம், ஊட்டச்சத்து மற்றும் தனித்துவமான தயாரிப்பு முறைக்காக உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இதன் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில், உலகின் மிக விலையுயர்ந்த அரிசி என்ற சாதனையுடன் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. இந்த அரிசியின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும். அதாவது, ஒரு கிலோ அரிசி வாங்கும் தொகையில் ஒரு சாதாரண குடும்பம் பல வாரங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிவிடலாம்.
Kinemai Premium Rice என்பது ஒரே ஒரு நெல் ரகத்தில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் விளையும் ஆயிரக்கணக்கான அரிசி ரகங்களில் இருந்து தரம், சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையில் சிறந்த 4 முதல் 6 வகைகள் கவனமாகத் தேர்வு செய்யப்படுகின்றன. பின்னர் அவற்றை சரியான விகிதத்தில் கலந்து இந்த பிரீமியம் அரிசி உருவாக்கப்படுகிறது.
மேலும், இந்த அரிசியின் மிகப்பெரிய சிறப்பு அதன் பாலிஷ் செய்யும் தொழில்நுட்பம். பொதுவாக வெள்ளை அரிசியை பாலிஷ் செய்யும்போது தவிடு மற்றும் அதனுடன் இருக்கும் பல முக்கிய ஊட்டச்சத்துகளும் நீக்கப்பட்டுவிடும். ஆனால், Kinemai அரிசியில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் காரணமாக, வெளிப்புற அடுக்குகள் நீக்கப்பட்டாலும் அரிசியின் முக்கிய சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இந்த அரிசி சுவை, மென்மை, மணம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய அனைத்திலும் உயர்தர அனுபவத்தை வழங்குகிறது.