தமிழ் பேசத் தெரியாது... திருவெம்பாவை பாடும் தாய்லாந்து பூசாரிகள்: நூற்றாண்டுகால தமிழ் மரபின் ஆச்சரியப் பின்னணி!

Published : Nov 04, 2026, 08:52 AM IST

தமிழ் பேசத் தெரியாத தாய்லாந்து அரச பிராமணப் பூசாரிகள், பல நூற்றாண்டுகளாகப் பொருள் புரியாமலேயே ‘திருவெம்பாவை’ தமிழ்ப் பாடலைப் பாடி வரும் வரலாற்றுப் பின்னணியையும், தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் ஆய்வையும் பற்றி பார்ப்போம்.

PREV
13
மார்கழி மரபும் தமிழ் வரலாற்றுப் பின்னணியும்

தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தின் அதிகாலை வேளைகளில் ஒலிக்கும் பழைமையான தமிழ்ப் பாசுரங்கள், கடல் கடந்து தாய்லாந்து நாட்டின் அரசு விழாக்களிலும் மன்னரின் முடிசூட்டு நிகழ்விலும் பாடப்பட்டு வருவது குறித்த வரலாற்றுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அதிகாலை விடியலுக்கு முன்பாக விஷ்ணுவுக்காக ஆண்டாள் அருளிய ‘திருப்பாவை’ மற்றும் சிவபெருமானைப் போற்றி மாணிக்கவாசகர் பாடிய ‘திருவெம்பாவை’ ஆகிய இரு பாடல்கள் பக்தியுடன் பாடப்பட்டு வருகின்றன. 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்தவை இந்தத் திருப்பாடல்கள்.

23
தாய்லாந்தில் 'திரியம்பாவை - திரிப்பாவை' திருவிழா

தமிழகத்தில் மார்கழி கொண்டாடப்படும் அதே காலகட்டத்தில் (டிசம்பர் – ஜனவரி), தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள அரச பிராமண பூசாரிகள் சிறப்பு வழிபாட்டு விழாவை நடத்துகின்றனர். இவ்விழா உள்ளூரில் ‘திரியம்பாவை - திரிப்பாவை’ (Triyampawai - Trippawai) என்று அழைக்கப்படுகிறது. ஆய்வின்படி, இந்த பெயர்கள் தமிழின் ‘திருவெம்பாவை’ மற்றும் ‘திருப்பாவை’ ஆகியவற்றின் மரூஉ என்பது தெளிவாகிறது.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிவபெருமானை வரவேற்கும் நோக்கில், பூசாரிகள் திருவெம்பாவைப் பாடல்களைத் தமிழிலேயே பாடுகின்றனர். எனினும், அங்கு தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் அர்ச்சகர்களுக்கு தற்போது தமிழ் பேசத் தெரியாது என்பதால், பாடலின் நேரடிப் பொருள் அறியாமலேயே அவர்கள் இப்பாடல்களைத் தொடர்ந்து பாடி வருகின்றனர்.

33
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் தமிழ்ப் பாடல்!

இப்பண்பாட்டுத் தொடர்பு திருவிழாவோடு முடிந்துவிடவில்லை. கடந்த 1955-ஆம் ஆண்டில் தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் அடிகள் மேற்கொண்ட ஆய்வில், தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவின் (Coronation) போது ஓதப்படும் மந்திரப் பாடல்களில் ஒன்று மாணிக்கவாசகரின் ‘திருவெம்பாவை’யிலிருந்து பெறப்பட்ட வரிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சடங்கிற்காக பாங்காக்கில் கடந்த 1784-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான சிவப்பு நிற ஊஞ்சல் (Giant Red Swing) இன்றும் அங்குள்ள முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. 1930-கள் வரை இவ்விழாவின்போது ஆண்கள் இந்த ஊஞ்சலில் ஏறி ஆடும் மரபைப் பின்பற்றி வந்துள்ளனர்.

பொருள் விளங்காத நிலையிலும், தாய்லாந்து அரச மரபினரால் அந்நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் சிவபெருமானைப் போற்றும் தமிழ்ப் பாடல் இன்றளவும் பாடப்பட்டு வருவது தமிழ் மொழியின் தொன்மைக்கும், உலகளாவிய வரலாற்றுத் தொடர்பிற்கும் சான்றாக அமைந்துள்ளது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories