நீண்ட நேர ஆபீஸ் வேலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்குப் பிறகு சாக்லேட் அல்லது இனிப்பு உணவுகள் மீது ஏன் அதீத ஆசை ஏற்படுகிறது என்பது குறித்த அறிவியல் காரணங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
நீண்ட நேர ஆபீஸ் வேலை, படிப்பு அல்லது கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு திடீரென சாக்லேட், பிஸ்கட் அல்லது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏன் ஏற்படுகிறது? இது வெறும் மனக்கட்டுப்பாடு இல்லாததால் ஏற்படுவதல்ல; இதன் பின்னால் மூளையின் ரசாயன மாற்றங்கள் உள்ளன.
24
மூளை ஏன் இனிப்பை நாடுகிறது?
உடல் எடையில் வெறும் 2% மட்டுமே உள்ள மூளை, ஓய்வில் இருக்கும்போது கூட உடலின் மொத்த ஆற்றலில் 20%-த்தைப் பயன்படுத்துகிறது. குளுக்கோஸ் மூளையின் முக்கிய எரிபொருளாக இருந்தாலும், மனச்சோர்வு ஏற்படும்போது மூளையில் குளுக்கோஸ் குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. பசியைத் தூண்டும் 'கிரெலின்' (Ghrelin) மற்றும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும் 'லெப்டின்' (Leptin) ஆகிய ஹார்மோன்கள் பசியைக் கட்டுப்படுத்தினாலும், இனிப்பு மீதான ஆசைக்கு மூளையின் 'ரிவார்ட் சிஸ்டம்' (Reward system) எனப்படும் வெகுமதி அமைப்பே முக்கியக் காரணமாக உள்ளது.
டோபமைன், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை:
இனிப்பு உணவுகள் மூளையில் மகிழ்ச்சி மற்றும் உந்துதலுடன் தொடர்புடைய 'டோபமைன்' (Dopamine) ரசாயனத்தைத் தூண்டுகின்றன. நாம் மனதளவில் சோர்வடையும்போது, மூளை உடனடி ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தேடுவதால் இனிப்பு உணவுகள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
அதேபோல், நீண்டகால மன அழுத்தத்தின்போது (Stress) சுரக்கும் 'கார்டிசோல்' (Cortisol) ஹார்மோன், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை நாடத் தூண்டுகிறது. போதுமான தூக்கமின்மையும் பசி ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி இனிப்பு ஆசையை அதிகரிக்கிறது.
34
உடற்பயிற்சிக்குப் பின் ஏற்படும் ஆசை வேறுபட்டதா?
கடுமையான உடற்பயிற்சியின்போது தசைகளில் சேமிக்கப்பட்டுள்ள 'கிளைகோஜன்' (Glycogen) ஆற்றல் செலவாகிறது. அதை ஈடுகட்ட உடல் கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்பை நாடுவது இயல்பான உடல் தேவை. ஆனால், மனச்சோர்வால் ஏற்படும் இனிப்பு ஆசை என்பது மூளையின் ஆறுதலுக்கான தேடல் மட்டுமே.
இனிப்பு சாப்பிட்டால் உண்மையில் ஆற்றல் கிடைக்குமா?
இனிப்பு சாப்பிடுவது உடனடி ஆற்றலைத் தரும் என்று நாம் நினைத்தாலும், 2019-ம் ஆண்டு வெளியான ஆய்வின்படி, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகள் மனநிலையை மேம்படுத்துவதில்லை; மாறாக, சாப்பிட்ட முதல் ஒரு மணி நேரத்தில் விழிப்புணர்வைக் குறைத்து சோர்வையே அதிகரிக்கின்றன.
மனச்சோர்வு ஏற்படும்போது சாக்லேட், இனிப்புகளைத் தேடுவதற்குப் பதிலாக, புரதம் (Protein), நார்ச்சத்து (Fibre) மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். அடுத்த முறை இனிப்பு சாப்பிடத் தோன்றினால், உங்கள் மூளைக்குத் தேவை சர்க்கரையா அல்லது போதுமான தண்ணீர், நல்ல தூக்கம் மற்றும் சிறிய ஓய்வா என்பதைச் சிந்தித்துச் செயல்படுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.