கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வீடு முழுவதும் தீப ஒளி, இறைவழிபாடு, இனிப்புப் பலகாரங்கள் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும். குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் வரும் இந்தத் திருநாளில் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி சிவபெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்குப் படையலிடுவதற்காகப் பல்வேறு இனிப்புகளைத் தயாரிப்பதும் காலம் காலமாகப் பின்பற்றப்படும் பாரம்பரியமாகும்.
இன்றைய காலத்தில் கடைகளில் விதவிதமான இனிப்புகள் கிடைத்தாலும், பாட்டி காலத்தில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பலகாரங்களுக்குத் தனி சுவை உண்டு. அரிசி, வெல்லம், தேங்காய், நெய் போன்ற எளிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐந்து பலகாரங்களையும் கார்த்திகை தீபத்திற்காக வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
1. நெய் அப்பம்
கார்த்திகை தீபம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நெய் அப்பம்தான். பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வெல்லக் கரைசல், பழுத்த வாழைப்பழம், ஏலக்காய்த்தூள், எள், தேங்காய்த் துண்டுகள் சேர்த்துக் கலக்க வேண்டும்.
இந்த மாவை சிறிது நேரம் ஊறவைத்த பிறகு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி சிறிய அப்பங்களாகச் சுட்டெடுக்கலாம். வெளிப்புறம் பொன்னிறமாகவும் உட்புறம் மென்மையாகவும் இருக்கும் இந்த அப்பம் அனைவருக்கும் பிடித்தமானது.
2. பொரி உருண்டை
கார்த்திகை தீபத்திற்குப் பொரி உருண்டை மிகவும் பிரபலமான பாரம்பரியப் பலகாரமாகும். இதைச் செய்வதற்கு நெற்பொரி அல்லது அரிசிப் பொரி, வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவை தேவை.
முதலில் வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி பாகு தயாரிக்க வேண்டும். பாகு சரியான பதத்திற்கு வந்ததும் பொரியைச் சேர்த்து விரைவாகக் கிளற வேண்டும். கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே சிறிய உருண்டைகளாகப் பிடித்துவிட வேண்டும். சுவையான பொரி உருண்டை தயார்.
3. கடலை உருண்டை
கடலை உருண்டை சுவையானது மட்டுமல்லாமல், வேர்க்கடலையில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகளும் உள்ளன. இதற்குத் தேவையான வேர்க்கடலையை நன்றாக வறுத்துத் தோல் நீக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெல்லத்தைப் பாகு காய்ச்சி அதில் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். சூடு குறைவதற்கு முன்பே சிறிய உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் பலகாரம் இது.