
ஒவ்வொரு நாளும் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் அந்த நாள் பாடத்தை படிக்க வைக்க அம்மாக்கள் படாதப்பாடுபடுகின்றனர். ஏனெனில், குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை கொண்டு வருவது மிகவும் கஷ்டமான ஒரு காரியமாகும். ஒருவேளை குழந்தைகளுக்கு வீட்டிலேயே படிக்கும் ஆர்வத்தை வளர்க்கவில்லை என்றால் கண்டிப்பாக அவர்களால் பள்ளியில் சரியாக படிக்க முடியாது.
இன்னும் சொல்ல போனால் படிக்கும் எண்ணம் கூட அவர்களுக்கு வரவே வராது. மேலும் குழந்தைகள் ஒவ்வொரு வகுப்பையும் தேர்ச்சி அடைந்து மற்ற வகுப்புக்கு செல்லும் போது, அவர்கள் அதிகம் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
குழந்தைகளுக்கு படிப்பின் ஆர்வம் இல்லாமல் போவது முக்கிய காரணம் நம்முடைய கல்வி திட்டம் தான். ஆம், நம்முடைய கல்வி திட்டம், ப்ராஜெக்ட், அசைன்மென்ட் என்று குழந்தைகள் விளையாட கூட நேரமில்லாமல் எப்போதுமே படிப்பு படிப்பு என அதிக சுமையாக இருப்பதால் அதன் அழுத்தத்தின் காரணமாக தான் அவர்களால் படிப்பில் ஆர்வம் காட்ட முடியாமல் போகின்றது.
ஏன் பெற்றோர்களாகிய நீங்களும் கூட அவர்களை புரிந்து கொள்ளாமல் முதல் இடத்தில் வர வேண்டும் என்றும், நல்ல ரேங்க் வரவேண்டும் என்றும் அவர்களை நச்சரிக்கிறார்கள். குழந்தைகளிடம் படிப்பின் ஆர்வம் அதிகரிக்க அவர்களுக்கு மன அழுத்தம் இல்லாமல் அமைதியான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் முழு ஈடுபாடுடனும், ஆர்வத்துடனும் படிக்க ஆரம்பிப்பார்கள். இப்படி செய்வதன் மூலமும் அவர்கள் நன்றாக படிப்பார்கள் மற்றும் அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும். எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு கல்வியின் ஆர்வத்தை கொண்டு வருவதற்கு சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அது என்ன என்பதை குறித்து இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: முத்து முத்தாக குழந்தையின் கையெழுத்து இருக்க.. இந்த 1 விசயம் பண்ணுங்க!
குழந்தைகளை படிக்க ஊக்குவிக்க சில டிப்ஸ் :
இலக்குகளை நிர்ணயிக்கவும்
உங்கள் குழந்தை படிக்கும் பாடம் ஏதாவது கடினமாக உணர்ந்தால், அந்த பாடத்தை ஒரே நாளில் படிக்க வைக்காமல் இரண்டு நாட்களில் படிக்க வையுங்கள். இப்படி செய்தால் உங்களது பிள்ளை படிக்கும் பாடத்தை பாரமாக உணர மாட்டார்கள். படிப்பதை எளிதாக உணர்வார்கள் அதே சமயம் நல்ல முன்னேற்றமும் அடைவார்கள். அதுபோல ஒரே நேரத்தில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தீர்கள். ஒரு சிறிய இலக்கை அடைந்தால் அவர்களுக்கு பிடித்தவாறு சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற பரிசுகளை வழங்கி பாராட்டுங்கள்.
சின்ன பிரேக் அவசியம்
குழந்தைகளை எப்போதும் படிப்பு புத்தகம் என்று மூழ்காமல் அவர்களுக்கு சிறிது இடைவேளை கொடுங்கள். அந்த சமயத்தில் விளையாட அல்லது மற்ற விஷயங்களை செய்ய சொல்லுங்கள் இப்படி செய்தால் படிப்பில் அவர்களுக்கு தொய்வு ஏற்படாது அவர்களால் நீண்ட நேரம் படிப்பில் கவனம் செலுத்த முடியும். எனவே ஒவ்வொரு 30-45 நிமிடங்களுக்கும் 5-10 நிமிட இடைவெளி அவர்களுக்கு வழங்குங்கள்.
ஒரு முன்மாதிரி தேவை
பெற்றோர்கள் புத்தகங்களை படித்தால் அல்லது ஏதாவது கற்றுக் கொண்டால் குழந்தைகள் அதையே செய்ய விரும்புவார்கள். அதுபோல குழந்தைகளுக்கு கதை சொல்லி கொடுப்பதும் மூலம் அவர்களுக்கு கற்கும் ஆர்வமும் அதிகரிக்கும். மேலும் வார இறுதி நாட்களில் அருகில் இருக்கும் நூலகங்களுக்கு குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்.
படிப்பு அட்டவணை அவசியம்
குழந்தைகளை தினமும் ஒரே நேரத்தில் படிக்க பழக்குங்கள். உதாரனமாக தினமும் மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை படிக்க வைக்கவும். இப்படி செய்தால் பிள்ளைகள் படிப்பதில் சிரமம் இருக்காது. ஒவ்வொரு நாளும் அந்த குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் அவர்கள் தானாகவே படிக்க ஆரம்பித்து விடுவார்கள் முழு மனதுடன் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
இதையும் படிங்க: ஒரு வயசான பிறகும் உங்க குழந்தைக்கு பேச்சு வரலயா? இதை செய்தால் உடனே பேசிடுவாங்க!!
சாதனையை கொண்டாடுங்கள்
குழந்தைகளின் சிறிய வெற்றிகளுக்கு கூட அவர்களை பாராட்டுவது மிகவும் அவசியம் உதாரணமாக அவர்கள் ஒரு பக்கத்தை படித்து முடித்தால், 'நன்றாக படித்து முடித்தாய்' என்று பாராட்டவும். இப்படி அவர்களை பாராட்டினால் அவர்கள் மேலும் படிக்க முயல்வார்கள். குழந்தையை பாராட்டுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது மற்றும் ஆர்வமாக படிப்பதை விரும்புவார்கள்.
விளையாட்டு மூலம் படிக்க செய்வது
குழந்தைகள் படிக்கும் பாடம் சளிப்படையாமல் இருக்க படிப்பை விளையாட்டாக மாற்றுங்கள். எடுத்துக்காட்டாக பாடங்களின் அடிப்படையில் குறுகிய கேள்விகளைக் கொண்ட வினாடி விடை போன்று விஷயங்களை அவர்களிடம் கேட்கவும். இப்படி செய்தால் குழந்தைகள் படிக்க விரும்புவார்கள்.
அமைதி தேவை
குழந்தைகள் படிக்கும் இடம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். போன், டிவி போன்ற சத்தங்கள் கேட்கக் கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் படிப்பில் சிறப்பாக கவனம் செலுத்துவார்கள். அதுபோல குழந்தைகள் படிக்கும் இடத்தில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும். வசதியாக படிக்கும் நாற்காலியும் இருக்க வேண்டும்.