வறட்சி மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கையான ஒன்று என்று ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் பிறந்தவர் ராஜேந்திர சிங். அரசு வேலையை 1984-ல் ராஜினாமா செய்த அவர், ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்குச் சென்று ஆயுர்வேத மருத்துவ சேவையாற்றினார். கல்வியும் கற்பித்தார்.
அந்த ஊருக்குப் படிப்பு, மருத்துவத்தைவிட தண்ணீர்தான் முக்கியம் என்பதை உணர்ந்த ராஜேந்திரசிங், அந்த ஊர்க் குளத்தை தன்னந்தனி ஆளாக தூர்வாரினார். ஆண்டுக்கணக்கில் பாடுபட்டு குளத்தின் பரப்பளவை அதிகரித்தார். பிறகு பெய்த திடீர் மழையால் குளம் நிரம்பியது. பின்னர் இளைஞர்களை ஒன்றுதிரட்டி அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன. கிராமம் கிராமமாக பாத யாத்திரை சென்று, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ராஜஸ்தான் மாநிலத்தில் 7 நதிகளை மீட்டெடுத்தார். இவரது வழிகாட்டுதலால் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர்ப் புரட்சி உருவாகியுள்ளது.
தண்ணீர் மனிதன்’ என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங், உலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும், ‘ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது