இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்தூர்:
இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 2017 முதல் இந்தூர் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. நவி மும்பை 3வது இடத்தைப் பிடித்துள்ளது. “இந்தூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தால், இது இந்தியாவில் இருக்கிறதா இல்லையா என்று தோன்றும். அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும்,” என்று இந்தூருக்கு அடிக்கடி வேலை விஷயமாகச் செல்லும் கார்ப்பரேட் நிர்வாகி நிதீஷா அகர்வால் கூறினார்.
லண்டனைச் சேர்ந்த கார்டியன் பத்திரிகை இந்த நகரம் குறித்த ஒரு கதையை வெளியிட்டது. இந்தூர் நகரில் தூய்மை எப்படி சாத்தியமானது என்பதை அறிய கார்டியன் எழுத்தாளர் அம்ரித் தில்லான் பல உள்ளூர் மக்களை சந்தித்தார். நிதீஷா அகர்வால் கூறிய "இது இந்தியாவில் இருக்கிறதா?" என்ற கருத்து மிகைப்படுத்தல் அல்ல. ஏனெனில் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில், பல நகரங்கள் குப்பைக் குவியல்களுடன் காணப்படுவது வழக்கம்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரும் அதுவரை அப்படித்தான் இருந்தது. நகரத்தில் சாலை ஓரங்களில் குப்பைகளில் நாய்கள், பன்றிகள், மாடுகள் சுற்றித் திரிந்தன. கார்கள் சென்று குப்பைகளை சாலையில் வீசின. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் இரவு 850 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். குப்பை வண்டிகள் ஒவ்வொரு தெருவிலும் ஐஸ்கிரீம் வண்டிகள் போல அறிவித்தபடி வருகின்றன. அந்த சத்தம் கேட்டதும் மக்கள் ஈரக் குப்பை, உலர் குப்பை என பிரித்து வண்டிகளில் போடுகின்றனர்.
ஒவ்வொரு குப்பை வண்டியும் ஜிபிஎஸ் மூலம் நகராட்சி ஊழியர்களால் கண்காணிக்கப்படுகிறது. இதனால் குப்பை வண்டிகள் சரியான சேவைகளை வழங்குகிறதா இல்லையா என்பதை அதிகாரிகள் எளிதில் கண்டுபிடிக்க முடியும். சிறிய தெருக்களில் கூட வண்ணமயமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குப்பை போடுபவர்களை அடையாளம் காண சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி இந்தூர் நகரம் நாட்டிற்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது.