காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சாம்பார் தஞ்சாவூரில் மராட்டிய மன்னர் சம்பாஜிக்காக உருவாக்கப்பட்டது என்றும், அதன் பெயர் அவரிடமிருந்தே வந்தது என்றும் கூறியுள்ளார். தென்னிந்திய உணவான சாம்பார் வட இந்தியரால்தான் உருவானது என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், மீண்டும் ஒருமுறை இணையத்தில் சுவாரசியமான ஒரு விவாதத்தை ஆரம்பித்துள்ளார். இந்த முறை, தென்னிந்தியாவின் பிரபலமான உணவான சாம்பாரின் வரலாறு குறித்து அவர் பேசியுள்ளதுதான் அதற்குக் காரணம்.
'சவுத் சைடு ஸ்டோரி' (South Side Story) என்ற கலை விழாவில் பேசியபோது, டெல்லியில் கிடைக்கும் சாம்பாரை அவர் விரும்பி உண்பாரா என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில், ஒரு சுவையானதாக அமைந்தது.
24
சாம்பாரை கண்டுபிடித்த தஞ்சாவூர்
சசி தரூர் பேசுகையில், “இந்த ஒரு விஷயத்தை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சாம்பார் உருவானதற்குக் காரணம் வட இந்தியாதான். மராட்டியர்கள் தஞ்சாவூரைக் கைப்பற்றியபோது, அங்கு சம்பாஜி மஹாராஜாவாகப் பொறுப்பேற்றார். அங்கு அவருக்குப் பிடித்த 'தால்' (பருப்பு குழம்பு) கிடைக்காததால், சமைப்பவர்கள் அவருக்குப் பிடிக்கும் வகையில் ஒரு புதிய உணவைத் தயாரித்து வழங்கினர். அதுவே சாம்பார். தஞ்சாவூரின் மராட்டிய பேஷ்வாவான சம்பாஜியின் பெயரால் தான் சாம்பாருக்கு அந்தப் பெயர் வந்தது” என்று விளக்கினார்.
34
சாம்பார் vs தால்
தனது பாணியில் நகைச்சுவை உணர்வுடன் அவர் மேலும் கூறுகையில், "அதனால், நீங்கள் (வட இந்தியர்கள்) சாம்பாரை எப்படிச் செய்தாலும், நாங்கள் 'தால்' செய்ததைவிட மோசமாக இருக்காது" என்று கூறினார்.
சசி தரூரின் இந்த உரை சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. இணையப் பயனர்கள் பலர் இதை பாராட்டி வருகின்றனர். "அவர் பேசுவதைப் பார்க்கும்போது எப்போதும் சுவாரசியமாக இருக்கும்" என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அவரது கருத்துக்குச் சிலர் மறுப்பும் தெரிவித்துள்ளனர். “சசி தரூர், மராட்டியர்களை வட இந்தியர்கள் என்று அழைத்தது தவறு. மகாராஷ்டிரா மேற்கு இந்தியாவில் உள்ளது, வடக்கு இந்தியாவில் இல்லை” என்று பல பயனர்கள் சுட்டிக்காட்டி விவாதித்துள்ளனர். எனினும், ஒரு பயனர், "தென்னிந்தியரைப் பொறுத்தவரையிலும், மகாராஷ்டிராவும் வட இந்தியாவைப் போலத்தான்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
சசி தரூர் சொன்ன இந்த சாம்பார் வரலாறு சமூக ஊடகங்களில் சூடான விவாதத்தை உருவாகியுள்ளது. இதில் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.