தேர்தல் வாக்குறுதி 12... கொடுத்தது வெறும் 6 சிலிண்டர்!
ஆண்டுக்கு 12 சிலிண்டர் தருவோம்னு சொன்னீங்க... 2 வருஷம் முடிஞ்சு போச்சு... அந்த 24 சிலிண்டர் எங்கே போச்சு? ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய இந்த ஒற்றைக் கேள்வி, ஒட்டுமொத்த அவையையும் அதிர வைத்திருக்கிறது.
ஸ்ரீநகரில் நடந்து வரும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையின் இலையுதிர்காலக் கூட்டத்தொடரில், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் சதீஷ் சர்மா ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்திற்குத் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு முறைப்படி ஒப்புதல் தந்துவிட்டதாகவும், இதற்கான அரசாணைகள் விரல் நுனியில் தயாராகி வருவதாகவும் பெருமிதத்தோடு அறிவித்தார்.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மேசையைத் தட்டி வரவேற்க, முதல்வர் உமர் அப்துல்லாவும், இது ஏழை எளிய மக்களின் கண்ணியமான வாழ்வுக்கான சமூக நீதிப் பரிசு; பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தினார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த அமைதி சுக்குநூறாக உடைந்தது.