புதுடில்லியில் தற்போது இயங்கி வரும் பார்லிமென்ட் கட்டிடம், சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
பழைய பார்லிமென்ட் கட்டிடம் நல்ல நிலையில் இருந்தாலும், இடம் பற்றாக்குறை காரணமாக, பழைய பார்லிமென்ட் கட்டிடத்தில் அருகிலேயே புதிய பார்லிமென்ட் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
புதிய பார்லிமென்ட் கட்டிடம் மொத்தம், 971 கோடி ரூபாய் செலவில், 64 ஆயிரத்து, 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தை, குஜராத்தை சேர்ந்த, 'ஹெச்.பி.சி, டிசைன்ஸ்' என்ற நிறுவனம் மிக பிரமாண்டமாக வடிவமைத்துள்ளது.
கட்டிட கட்டுமான பணிகள், 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடத்தை கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை நேற்று இரவு பிரதமர் மோடி, நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பணிகள் எவ்வாறு நடந்து வருகிறது என்பது குறித்தும், தொழிலாளர்களிடம் விசாரித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள் முழு வீச்சில் துவங்கி நடந்து கொண்டிருப்பதால், 2022ல் புதிய கட்டடம் தயாராகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது நான்கு மாடிகளுடன், 6 நுழை வாயில்களுடன் கட்டப்படுகிறது. லோக்சபா, 1,145 சதுர மீட்டரில், 888 இருக்கைகளுடனும், ராஜ்யசபா, 1,232 சதுர மீட்டரில், 384 இருக்கைகளுடனும் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.