முதல் வானொலி உரை
பிரதமர் நரேந்திர மோடியின் 'மன் கி பாத்' வானொலியில் உரை நிகழ்ச்சி கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ஒலிபரப்பானது. அன்று தொடங்கி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் (DD) நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்களில் ஒலிபரப்பாகி வருகிறது.
100வது உரை
அரை மணிநேரம் நீடிக்கும் இந்த உரை நிகழ்ச்சி நாளை (ஏப்ரல் 30) 100வது முறையாக ஒலிபரப்பாக இருக்கிறது. 100வது எபிசோட் ஒலிபரப்பாவதை முன்னிட்டு மன் கி பாத் கருத்தரங்குக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பிரதமரின் 100வது வானொலி உரையை ஐ.நா. சபையின் தலைமையகத்திலும் ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை பிரதமர் மன் கி பாத் உரையில் பேசியவற்றை சுருக்கமாக நினைவுகூரலாம்.
போதையில்லா இந்தியா
அக்டோபர் 3, 2014 அன்று முதல் எபிசோடில் பேசிய பிரதமர் அசுத்தத்தைப் போக்க உறுதிமொழி எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். டிசம்பர் 14, 2014 அன்று 'போதையில்லா இந்தியா' பிரச்சாரத்தை நடத்துமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தினார். 2015 பிப்ரவரி மாத நிகழ்ச்சியில் தேர்வுகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். பரீட்சையை ஒரு சுமையாகக் கருதாதீர்கள் எனக் கூறினார். மார்ச் மாத உரையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவசாயிகள் மத்தியில் நிலவும் குழப்பம் குறித்தும் பிரதமர் பேசினார். உலக யோகா தினத்தில் (ஜூன் 21) பேசிய பிரதமர் மோடி, பருவமழையில் மழை நீரை சேமிப்பதோடு, தோட்டக்கலை இயக்கத்தை தொடங்குவது குறித்தும் பேசினார்.
ஜன்தன் திட்டம்
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத உரையில் ஜன்தன் திட்டம் குறித்துப் பேசினார். செப்டம்பர் மாதம் தீபாவளியன்று அதிக அளவில் மண் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 2015 நவம்பர் மாதம் இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து பிரதமர் பேசினார். டிசம்பர் மாதம் ஸ்டார்ட் அப் இந்தியா பற்றி குறிப்பிட்டார். 2016 மார்ச் மாதம் கிரிக்கெட்டுடன் ஹாக்கி, கால்பந்தாட்டத்திலும் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்றார். 2016 ஏப்ரலில் ஒவ்வொரு கிராமத்திலும் தண்ணீரைச் சேமிக்க பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.
இஸ்ரோ சாதனை
2016 ஜூன் மாதம் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்ததற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார். செப்டம்பர் 2016ல் தீன்தயாள் உபாத்யாய் பிறந்த நூற்றாண்டு விழாவை 'கரீப் கல்யாண்' ஆண்டாக கொண்டாட வலியுறுத்தினார். ஜனவரி 2017ல் தேர்வுகளை ஒரு கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். 2017 மார்ச் மாதம் பேசிய பிரதமர், ரவீந்திரநாத் தாகூரின் சாதனைகளை நினைவுகூர்ந்தார். திருமணங்களில் உணவு வீணாவதை தடுப்பது பற்றிப் பேசிய அவர், மகப்பேறு விடுமுறையை 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக உயர்த்துவதாக அறிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டம்
2017ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி பேசிய பிரதமர் தொழிலாளர்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய முக்கிய பங்களிப்பு பற்றி பேசினார். மே மாதம் கழிவு மேலாண்மை குறித்து தன் கருத்துகளைத் தெரிவித்தார். ஜூன் மாதம் தூய்மை இந்தியா திட்டம் பற்றியும் ஜூலை மாதம் ஜிஎஸ்டி சட்டம் பற்றியும் பேசினார். 2018 ஜனவரியில் கல்பனா சாவ்லாவை நினைவுகூர்ந்த அவர் அடுத்த மாதம் விஞ்ஞானி சர் சிவி ராமனைப் பற்றிப் பேசினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
2018 ஜனவரியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலை பற்றிப் பேசினார். மே 2018ல் 'நவிகா சாகர் பரிக்ரமா' என்ற தலைப்பில் பேசினார். ஜூனில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே முதல் டெஸ்ட் போட்டி பற்றிக் குறிப்பிட்டார். செப்டம்பர் 2018ல் பேசிய பிரதமர் 2016ஆம் ஆண்டு நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி நினைவுகூர்ந்தார். அக்டோபரில் பேசியபோது, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் நடைபெறும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். நவம்பரில் வானொலியின் சக்தியைப் பாராட்டிய பிரதமர், 'ஆயுஷ்மான் பாரத்' தொடங்கப்பட்டது பற்றி டிசம்பர் உரையில் பேசினார்.
எல்லா பிரச்சனைக்கும் தீர்வு
2019 மக்களவைத் தேர்தலுக்கு பின் முதல் முறை ஜூன் 2019ல் பேசினார். 2019 ஆகஸ்டில் பேசிய பிரதமர் ஃபிட் இந்தியா இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்றார். செப்டம்பர் 2019ல் போதைப்பொருளிலிருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டுகோள் விடுத்தார். அக்டோபரில் பேசும்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வலியுறுத்தினார். 2020 ஜனவரியில் 71வது குடியரசு தினத்தன்று மன் கி பாத் நிகழ்ச்சியின் 60வது உரையை நிகழ்த்தினார். கேலோ இந்தியா, ஃபிட் இந்தியா திட்டங்கள் பற்றிப்ப பேசினார்.
சுயசார்பு இந்தியா
2020 பிப்ரவரியில் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியங்கள் பற்றியும் கைவினைப்பொருட்கள், உணவு, உடைகள் பற்றியும் விளக்கினார். கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஏப்ரல் 2020ல் பேசும்போது, கொரோனாவுக்கு எதிரான உண்மையான போராட்டம் பொதுமக்களால் நடத்தப்படுகிறது என்ற பிரதமர் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கவும் வலியுறுத்தினார். மே மாதம் சுகாதார சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஜூன் மாதம் பேசும்போது, சுயசார்பு இந்தியாவை நோக்கி நம் அனைவரின் அர்ப்பணிப்பு அவசியம் என்றார். 2020 செப்டம்பரில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா விவசாயிகளைப் பற்றிப் பேசினார்.
பிளாஸ்டிக்கை இல்லாத இந்தியா
நவம்பர் 2020 பேச்சில் சலீம் அலி, பிரேசிலின் ஜோனாஸ் பற்றி எடுத்துரைத்தார். 2021 ஜனவரியில் ஆற்றிய உரையில், இந்தியாவை பிளாஸ்டிக்கை இல்லாத நாடாக மாற்ற அழைப்பு விடுத்தார். பிப்ரவரி 2021 உரையில் வாரணாசியின் சமஸ்கிருத கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் சமஸ்கிருத வர்ணனையை அறிமுகப்படுத்தினார். மார்ச் 2021ல் உலோகக் குப்பைகளால் சிற்பங்களை உருவாக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீனிவாச படகண்ட்லாவைப் பற்றிக் கூறினார். ஏப்ரல் 2021ல் 76வது மன் கி பாத் உரையில், முழுமையாக கொரோனா தடுப்புப் பணியாளர்கள் பற்றிப் பேசினார்.
மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம்
செப்டம்பர் 2021 எபிசோடில் தண்ணீரை சேமிப்பது குறித்து விவாதித்தார். அக்டோபர் 2021ல் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதைப் பாராட்டிப் பேசினார். நவம்பர் மாதம் இந்திய கலை, கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்துப் பேசினார். டிசம்பர் 2021ல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார். 2022 ஜனவரியில் இந்தியாவின் ஆன்மீக வலிமை பற்றிப் பேசினார். பிப்ரவரி 2022ல் இந்திய சிலைகள் குறித்து உரையாற்றினார். மார்ச் மாதம் ஆயுர்வேதத்தின் நன்மைகளைப் பட்டியலிட்டார். மார்ச் மாத உரையில் BHIM UPI பணபரிவர்த்தனை பற்றிப் பேசினார். ஜூன் 2022ல் பேசியபோது, இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்தியதன் விளைவுகள் பற்றி நினைவுகூர்ந்தார்.
அமிர்த மஹோத்சவ்
ஜூலை 2022ல் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதைப் பற்றிப் பேசினார். அடுத்த மாதம் அமிர்த மஹோத்சவ் பற்றிப் பேசினார். செப்டம்பர் 2022ல் சிறுத்தைகளைப் பற்றி உரையாற்றினார். அக்டோபர் 2022ல் உரையாற்றும்போது சூரியனை வழிபடும் சத் பூஜை பற்றிக் கூறினார். நவம்பரில் இந்தியா தலைமை வகிக்கும் ஜி20 மாநாட்டின் லோகோவை அறிமுகப்படுத்திப் பேசினார். 2023 பிப்ரவரியில் இந்திய பொம்மைகளின் சிறப்பைப் போற்றினார். மார்ச் 2023 உரையில் மன் கி பாத் 100வது உரையை நிறைவு செய்வது பற்றிக் கூறினார்.