கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கலியுக தெய்வமாக வணங்கப்படும் திருமலை வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதியில் குவிந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக திருப்பதியை நோக்கி செல்கிறார்கள். கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் திருமலை வெங்கடேஸ்வர சுவாமியை வேண்டிய நிலை உள்ளது.
23
தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் 300 ரூபாய் செலவு தரிசனம் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் 5 முதல் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்திற்காக முதல் நாள் டோக்கன் பெற்ற பக்தர்கள் 6 முதல் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
33
2 நாட்களில் கொட்டிய உண்டியல் காணிக்கை
அதேபோல் இலவச டோக்கன் பெறாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் (விடுமுறை நாட்களான சனி ஞாயிறு) ஒரு லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதேபோல் கடந்த 2 நாட்களில் ஆறு கோடியே 90 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக மட்டும் பெறப்பட்டுள்ளது. மேலும் 80 ஆயிரம் பக்தர்கள் கடந்த இரண்டு நாட்களில் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.