பாமாயிலுக்கு எதிரான பிரச்சாரங்கள் அறிவியல் ஆதாரமற்றவை மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்துகின்றன என்று இந்திய எண்ணெய் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (OTAI) கவலை தெரிவித்துள்ளது.
"பாமாயில் வேண்டாம்" ("No Palm Oil") என்ற பெயரில் பரவலாக மேற்கொள்ளப்படும் விளம்பரப் பிரச்சாரங்கள் குறித்து, இந்திய எண்ணெய் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (Oil Technologists' Association of India - OTAI) கவலை தெரிவித்துள்ளது. இந்த பிரச்சாரங்கள் அறிவியல் ஆதாரங்களை புறக்கணிப்பதாகவும், நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாமாயில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி நடத்தப்படும் இந்த பிரச்சாரங்கள், எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லாதவை என்று OTAI-யின் தேசிய தலைவர் ராஜீவ் சூரி கூறியுள்ளார். இந்தத் தவறான பிரச்சாரங்கள் சந்தையில் போட்டியை எதிர்கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு வணிக உத்தியாகவே தோன்றுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
OTAI என்பது எண்ணெய் உற்பத்தி, பதப்படுத்துதல், ஆராய்ச்சி போன்ற துறைகளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், வேதியியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் சங்கம் ஆகும்.
24
பாமாயிலில் உள்ள ஊட்டச்சத்துகள்
OTAI வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமாயிலின் ஊட்டச்சத்து பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பாமாயிலில் கொழுப்புகள் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளன. டிரான்ஸ் கொழுப்பு அறவே இல்லை. கொலஸ்ட்ரால் இல்லை. என அந்த அறிக்கை கூறுகிறது.
"பொறுப்புடன் பயன்படுத்தினால், பாமாயில் மற்ற சமையல் எண்ணெய்களைப் போலவே பாதுகாப்பானது" என்று OTAI தலைவர் ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார். பாமாயில் பயன்பாடு குறித்த விவாதங்கள், வெறும் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்காமல், தரவுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
34
இந்தியாவின் முக்கிய சமையல் எண்ணெய்
உலக அளவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் பாமாயில் தான். இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் நுகர்வில், 40% க்கும் அதிகமாக பாமாயில் உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பு நிரூபிக்கப்பட்டிருந்தும் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது நுகர்வோரை குழப்பிவிடும்.
மத்திய அரசு சமையல் எண்ணெய்கள், குறிப்பாக பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ஊக்குவிக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் இணைந்து வெளியிட்ட உணவு வழிகாட்டுதல்கள், பாமாயிலை சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம் என உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், பாமாயில், நிலக்கடலை, எள், அரிசி தவிடு, சூரியகாந்தி போன்ற பல்வேறு எண்ணெய்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவதன் மூலம், சமச்சீரான கொழுப்பு அமிலங்களைப் பெறலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.