மும்பையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடங்கியுள்ளது, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, விமானங்கள் தாமதமாகின்றன, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன
மும்பையில் இந்த ஆண்டு பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச மழையை மும்பை பதிவு செய்துள்ளது. இந்த மாதம் மட்டும் 891 மி.மீ மழை பெய்துள்ளது, இது சராசரி மாத அளவான 560.8 மி.மீட்டரை விட மிக அதிகம்.
மலட் பகுதியில் உள்ள சின்சோலி கிராமத்தில் 361 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல், போவாய், விக்ரோலி, செம்பூர், தாதர் மற்றும் வடலா போன்ற பகுதிகளில் 200 முதல் 300 மி.மீ வரை மழை பெய்துள்ளது. பருவமழையின் மொத்த அளவு இதுவரை 2,193.2 மி.மீட்டரைத் தாண்டியுள்ளது, இது ஒட்டுமொத்த பருவமழை சராசரியான 2,101.8 மி.மீட்டரை விட அதிகம்.
25
மின்சாரம் மற்றும் விமான சேவை பாதிப்பு
கனமழை காரணமாக மும்பையின் போக்குவரத்து அமைப்பு சீர்குலைந்துள்ளது. குர்லா, அந்தேரி, மற்றும் காட்கோபர் உள்ளிட்ட பல புறநகர்ப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலைய ஓடுபாதையில் நீர் தேக்கம் மற்றும் குறைந்த பார்வை காரணமாக 11 விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. 24 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நிறுத்தப்பட்டன.
35
பேருந்து, மோனோ ரயில்கள் நிறுத்தம்
135 பெஸ்ட் (BEST) பேருந்து வழித்தடங்கள் மாற்றிவிடப்பட்டுள்ளன. ரயில் பாதைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், சென்ட்ரல் மற்றும் ஹார்பர் லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அதிக பயணிகளுடன் சென்ற இரண்டு மோனோ ரயில்கள் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பல மணிநேரம் நடுவழியில் சிக்கித் தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் கிரேன் மற்றும் ஏணிகள் மூலம் மீட்டனர். சிலர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 15 முதல் மகாராஷ்டிரா முழுவதும் பெய்த கனமழையில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், நாந்தேட் மாவட்டத்தின் முகேத் தாலுகாவில் ஏற்பட்ட மேகவெடிப்பால் எட்டு பேர் பலியாகினர். 12 லட்சம் ஹெக்டேருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், இழப்பீடுகளை விரைந்து வழங்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
55
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்த ரெட் அலர்ட் துல்லியமாக நிரூபணமாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த வானிலை அமைப்பு இப்போது பலவீனமடைந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் புதன்கிழமைக்கான எச்சரிக்கையை ஆரஞ்சு அலர்ட்டாக மாற்றியுள்ளது. மேலும், வியாழக்கிழமை முதல் மழை குறைந்து மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும் என்றும், ஓரளவு இயல்பு நிலை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.