
டோல்கேட்களில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து, எரிபொருள் விரயத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளை (Toll Plazas) படிப்படியாக அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மல்டி-லைன் ஃப்ரீ ஃப்ளோ (Multi-Lane Free Flow - MLFF) என்ற தடையில்லா டோல் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
2026 செப்டம்பர் நிலவரப்படி பல இடங்களில் இது செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், வாகனங்கள் டோல்கேட்டில் நின்று கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அதற்குப் பதிலாக, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாகனங்களை அடையாளம் கண்டு, பயணித்த சுங்கக் கட்டணத்தை தானாக வசூலிக்கும் வகையில் MLFF அமைப்பு செயல்படும்.
MLFF – Multi-Lane Free Flow என்பது வாகனங்கள் டோல் பிளாசாவில் நிற்காமல், வேகத்தைக் குறைக்காமல் பயணிக்கும் போதே டோல் கட்டணம் தானாக வசூலிக்கப்படும் தொழில்நுட்பம்.
அதாவது, வாகனம் டோல் பகுதியை கடக்கும்போது, அங்குள்ள கேமரா அல்லது ரீடர் மூலம் வாகனம் அடையாளம் காணப்படும். பின்னர், இணைக்கப்பட்டுள்ள FASTag கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் தானாக வசூலிக்கப்படும். இதனால், வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணிக்க முடியும்.
இப்போது இருக்கும் FASTag முறையில், வாகனம் டோல் பிளாசாவை அடையும்போது FASTag ரீடர் கட்டணத்தைப் பிடித்தாலும், Boom Barrier திறக்கும் வரை வாகனம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், MLFF-ல் அந்தத் தடையே இருக்காது.
MLFF அமைப்பில் சாலையின் மேல்பகுதி அல்லது குறிப்பிட்ட இடங்களில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்படும். இந்த அமைப்பின் மூலம் வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியும்.
வாகனம் MLFF டோல் பகுதியை கடக்கும்போது, முதலில் அதில் பொருத்தப்பட்டுள்ள FASTag-ஐ RFID ரீடர் அடையாளம் காணும். அதே நேரத்தில், ANPR கேமரா வாகனத்தின் Registration Number-ஐ தானாகப் பதிவு செய்யும்.
இந்த முறையில் Boom Barrier இல்லாததால், டோல்கேட்டில் வாகனத்தை நிறுத்தி காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாகனம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும்போதே, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள FASTag கணக்கிலிருந்து சுங்கக் கட்டணம் தானாக வசூலிக்கப்படும்.
ஒருவேளை FASTag-ல் போதிய பணம் இல்லாமலோ அல்லது FASTag செயல்படாத நிலையிலோ இருந்தால், வாகன உரிமையாளருக்கு E-Notice அனுப்பப்படும். தற்போதைய விதிகளின்படி, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கட்டணத்தை 72 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும். தவறினால், வாகன வகைக்கு ஏற்ப இரட்டிப்பு User Fee வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் MLFF அடிப்படையிலான சுங்கக் கட்டண முறை, குஜராத் மாநில சூரத் வழித்தடத்தில் சோர்யாசி சுங்கச்சாவடியில் (Choryasi Toll Plaza) அறிமுகப்படுத்தப்பட்டது.
NHAI National Highways Authority of India) தகவலின்படி, 2026 மே 1 முதல் இந்த MLFF சுங்க வசூல் முறை செயல்பாட்டுக்கு வந்தது. முதல் நாளிலேயே சுமார் 41,500 வாகனங்கள் இந்த MLFF டோல் பகுதியைக் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த தொழில்நுட்பம் நாட்டின் மற்ற தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சுங்கக் கட்டண பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை 48 (NH-48) வழித்தடத்தில் உள்ள தௌலத்புரா, மனோஹர்புரா மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய சுங்கக் கட்டணப் பகுதிகளில் MLFF முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் மானேசர் முதல் ஜெய்ப்பூர் வரையிலான NH-48 வழித்தடத்தில் barrier-free பயணம் சாத்தியமாகியுள்ளது என்று NHAI தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருநீர்மலை (Thiruneermalai) மற்றும் அத்திப்பட்டு-மேனாம்பேடு (Athipattu-Menambedu) கிராம சுங்கச்சாவடிகளில் IHMCL (Indian Highways Management Company Limited) நிறுவனம் FASTag-ANPR தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான Multi Lane Free Flow (MLFF) user-fee collection தொடர்பாக ஏற்கனவே tender வெளியிட்டுள்ளது.
முக்கியமாக MLFF வந்தால் டோல் கட்டணம் இல்லாமல் போகும் என்று அர்த்தமில்லை. மாறுவது டோல் வசூலிக்கும் முறை மட்டுமே.
MLFF முறையில் வாகனத்தை நிறுத்தாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகன உரிமையாளர்கள் தங்களது FASTag சரியாக செயல்படுகிறதா? FASTag வாகனத்தின் windshield-ல் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? active நிலையில் உள்ளதா? சரியான வாகன பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு போதுமான balance உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.