தண்ணீரில் ஓடும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! டீசல், கரண்ட் எதுவும் தேவையில்ல!

First Published | Nov 12, 2024, 8:00 AM IST

இந்தியாவில் விரைவில் 'தண்ணீர்' மூலம் ரயில்கள் இயக்கப்படும். அந்த ரயில்களுக்கு பெட்ரோல், டீசல், மின்சாரம் தேவையில்லை. இந்த ரயில்கள் பற்றி முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Hydrogen Train

நீராவி இன்ஜின் முதல் நிலக்கரி புகையை வெளியேற்றும் ரயில் வரை இந்திய ரயில்வே பல மாற்றத்தையும் சந்தித்துள்ளது. இன்று இந்திய ரயில்வேயின் ரயில்கள் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்குகின்றன. வந்தே பாரத், சதாப்தி, தேஜஸ் போன்ற சொகுசு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புல்லட் ரயில் பணிகள் ராக்கெட் வேகத்தில் நடந்து வருகின்றன. இத்தனைக்கும் மத்தியில், அடுத்த மாதம் முதல், டீசல் அல்லது மின்சாரம் தேவையில்லாத தண்ணீரில் ஓடும் ரயில் இயக்கப்பட உள்ளது.

Hydrogen Train

நாட்டிலேயே முதன்முறையாக தண்ணீர் கொண்டு ஓடும் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஹைட்ரஜன் ரயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் 2024 டிசம்பரில் நடைபெறும் எனத் தெரிகிறது. 2024 டிசம்பரில் அதன் சோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்த ரயிலுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்காக நீர் சேமிப்புக் கிடங்கு கட்டப்படும்.  

Tap to resize

Hydrogen Train

'நீரில்' இயங்கும் ஹைட்ரஜன் ரயிலின் ஹைட்ரஜன் எரிபொருள் செல் மற்றும் உள்கட்டமைப்பு சோதனை வெற்றி பெற்றுள்ளது. செல் மற்றும் ஹைட்ரஜன் ஆலையின் வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே தகவலின்படி, ஒரு ஹைட்ரஜன் ரயிலின் விலை சுமார் ரூ.80 கோடி.

Hydrogen Train

நீரில் ரயில் எப்படி ஓடுகிறது என்று மக்கள் ஆச்சரியப்படக்கூடும். இந்திய ரயில்வே 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கிய முயற்சியாக, ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் இயக்கம் 2024-25 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

ஹைட்ரஜன் ரயிலில் டீசல் என்ஜின்களுக்குப் பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் உள்ளன. அவை கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் அல்லது கார்பன் துகள்களை வெளியிடுவதில்லை. இந்த ரயில்களை இயக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். 

Hydrogen Train

ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் உதவியுடன், இந்த ரயிலில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை மாற்றி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரம் ரயிலை இயக்க பயன்படுகிறது. ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் என்ஜின்கள் புகைக்கு பதிலாக நீராவி மற்றும் தண்ணீரை வெளியிடும். இந்த ரயிலில் டீசல் எஞ்சினை விட 60 சதவீதம் குறைவாகவே சத்தம் வரும். இதன் வேகம் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் ஆகியவை டீசல் ரயிலுக்கு சமமாகவே இருக்கும்.

Hydrogen Train

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் 90 கிலோமீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இந்த ரயிலை டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே, நீலகிரி மலை ரயில், கல்கா சிம்லா ரயில், மாதேரன் ரயில்வே, காங்க்ரா பள்ளத்தாக்கு, பில்மோரா வாகாய் மற்றும் மார்வார்-தேவ்கர் மதரியா வழித்தடங்களிலும் இயக்கலாம் என ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்லும் என்று நம்பப்படுகிறது. இந்த ரயிலை தொடர்ந்து 1000 கி.மீ. வரை இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Latest Videos

click me!