திருவனந்தபுரம் மேயரானார் பிஜேபியின் வி.வி. ராஜேஷ்! 40 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!

Published : Dec 26, 2025, 04:18 PM IST

திருவனந்தபுரம் மாநகராட்சியில் 40 ஆண்டு கால இடதுசாரி முன்னணி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, பாஜக முதன்முறையாக மேயர் பதவியைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. வி.வி. ராஜேஷ் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

PREV
15
திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடந்த 40 ஆண்டுகளாக நீடித்து வந்த இடதுசாரி முன்னணியின் (LDF) ஆதிக்கத்தை வீழ்த்தி, பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக மேயர் பதவியைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

25
வி.வி. ராஜேஷ் மேயராகத் தேர்வு

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான மேயர் தேர்தலில், பாஜக மாநிலச் செயலாளர் வி.வி. ராஜேஷ் திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 101 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில், விழிஞ்சம் வார்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால் 100 வார்டுகளுக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் வி.வி. ராஜேஷ் 51 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு ஒரு சுயேச்சை உறுப்பினர் ஆதரவு அளித்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரி முன்னணியின் (LDF) வேட்பாளர் பி. சிவாஜி 29 வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) வேட்பாளர் கே.எஸ். சபரிநாதன் 19 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் கேரள வரலாற்றிலேயே ஒரு மாநகராட்சியின் மேயர் பதவியை அலங்கரிக்கும் முதல் பாஜக தலைவர் என்ற பெருமையை வி.வி. ராஜேஷ் பெற்றுள்ளார்.

35
மாநகராட்சி தேர்தல் முடிவுகள்

கேரளாவிலுள்ள ஆறு மாநகராட்சிகளில், திருவனந்தபுரத்தைத் தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி நான்கு மாநகராட்சிகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதன்படி, கொச்சி மாநகராட்சி மேயராக வி.கே. மினிமோள், கொல்லம் மேயராக ஏ.கே. ஹபீஸ், திருச்சூர் மேயராக டாக்டர் நிஜி ஜஸ்டின் மற்றும் கண்ணூர் மேயராக பி. இந்திரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இடதுசாரி முன்னணி (LDF) கோழிக்கோடு மாநகராட்சியில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டது. பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை வென்றதோடு, திருப்பூணித்துறா மற்றும் பாலக்காடு நகராட்சிகளிலும் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

45
பாலாவில் இளம்பெண் சாதனை

இந்தத் தேர்தலில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, பாலா நகராட்சியில் தியா பினு புளிக்கன்கண்டம் என்ற 21 வயது இளம்பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கேரளாவின் மிக இளம் வயது நகராட்சித் தலைவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இவர் தனது தந்தை மற்றும் மாமாவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். இதன் மூலம் கேரள காங்கிரஸ் (மாணி) பிரிவின் கோட்டையாகக் கருதப்பட்ட பாலா நகராட்சி அவர்கள் கையை விட்டுப் போயுள்ளது.

55
அரசியல் முக்கியத்துவம்

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக துணை மேயர் பதவியையும் கைப்பற்றியுள்ளது. பாஜகவின் பெண் தலைவர் ஜி.எஸ். ஆஷா நாத் துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளீதரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

கேரள அரசியலில் பாஜகவின் இந்த அசுர வளர்ச்சி, வரும் காலங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories