குஜராம் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் சங்வி என்பவருச் சொந்தமான நிறுவனம் சங்வி அன்ட் சன்ஸ். வைர நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் இந்த நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியுள்ளது. இந்த மோகன் சங்வியின் மகன் தனேஷ் சங்வி. தனேஷ் சங்விக்கு தேவன்ஷி சங்வி (8), காவ்யா (5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
நீண்ட காலமாக வைர நகை வியாபாரம் செய்து செல்வச் செழிப்புடன் திகழ்ந்தாலும், தனேஷ் சங்வியின் குடும்பம் மத நம்பிக்கைகள் மீது அதிக பற்று கொண்டிருக்கிறது. அதனால், ஆடம்பரமாக வசிக்க வசதி வாய்ப்புகள் இருந்தும் எளிமையாகவே வசித்துவந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்க வேண்டிய சிறுமி தேவன்ஷி சங்கவி குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு இன்று துறவறம் பெற்றிருக்கிறார்.
சிறுமி தேவன்ஷி குழந்தைப் பருவத்திலேயே கடவுள் பக்தி அதிகம் உடையவராக வளர்க்கப்பட்டுள்ளார். நாள் தவறாமல் மூன்று வேளை கடவுளிடம் பிரார்த்தனை செய்வது சிறுமிக்கு வழக்கப்படுத்தப்பட்டுள்ளது. இவர் துறவியாவதை முன்னிட்டு நேற்று, செவ்வாய்க்கிழமை, அவரது குடும்பத்தினர் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். சிறுமி தேவன்ஷி முன்னிலையில் யானைகள், குதிரைகள், ஒட்டகங்களுடன் மாபெரும் அணிவகுப்புடன் நகரில் வலம்வந்தனர். ஏற்கெனவே இதேபோன்ற பிரமாண்டமான ஊர்வலத்தை பெல்ஜியம் நாட்டிலும் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறுமியின் குடும்பத்தினர் ஒருவரிடம் பேசியபோது, “தேவன்ஷி சங்வி எப்போதும் டி.வி.யோ சினிமாவோ பார்ப்பது கிடையாது. ஹோட்டல்களுக்குச் சென்றது இல்லை. திருமண நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொண்டதில்லை. ஆனால் 367 முறை தீட்சை அளிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். இதனால்தான் தேவன்ஷி சின்ன வயசிலேயே துறவறத்தை நாடியுள்ளார். இரண்டு வயதிலேயே உண்ணாவிரதம் இருக்கும் பழக்கத்தைத் தொடங்கிவிட்டார். அப்போதே தான் துறுவி ஆகவேண்டும் என்ற எண்ணம் தேவன்ஷிக்கு வந்துவிட்டது.” என்று சொல்கிறார்.
தேவன்ஷி தீட்சை பெற தகுதி உடையவராகத் தேர்வாகும் முன் துறவிகளுடன் 600 கி.மீ. நடந்தே சென்றிருக்கிறார் என்றும் பல கடினமான சோதனைகளுக்குப் பின்புதான் அவரது குரு ஜைனாச்சார்யா கீர்த்தியஷ்சூரிஸ்வர்ஜி மஹராஜிடம் துறவறத்துக்கான ஒப்புதல் கிடைத்தது என்றும் சொல்கிறார்கள்.