
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர்.
ரயில்களில் குளிர்சாதன பெட்டிகள், 2ம் வகுப்பு சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் முன்பதில்லாத பெட்டிகள் உள்ளன. இதில் குளிர்சாதன பெட்டிகளிலும், 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் முன்பதிவு செய்து கன்பார்ம் ஆன டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக ரயிலில் 2ம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகளும், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொண்ட பயணிகளும் அதிகரித்து விட்டது. மேற்கண்ட பயணிகளால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனர்.
வடமாநிலங்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்வது தொடர்ந்து வந்த நிலையில், இப்போது கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்பவர்கள், முன்பதிவில்லாத பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய தொடங்குவது அதிகமாகி விட்டது.
ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறும் முன்பதிவு செய்யாத பயணிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் ரயில்வே துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ''ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளில் பயணம் செய்த காத்திருப்பு பட்டியல் (வெயிட்டிங் லிஸ்ட்) பயணிகளின் விவரங்கள் ரயில்வே அமைச்சகத்திடம் உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்த காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளின் விவரங்கள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்தவர்களின் விவரங்கள் பராமரிக்கப்படவில்லை'' என்றார். தொடர்ந்து பேசிய அவர், ''விதிகளின்படி காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை'' என்று தெரிவித்தார்.
ரயில் டிக்கெட் மூலம் கிடைக்கும் 6 அசத்தல் நன்மைகள்; இனிமே மறக்காம யூஸ் பண்ணுங்க!
மேலும் இது குறித்து விளக்கம் அளித்த அஸ்வினி வைஷ்ணவ்,''நாடு முழுவதும் இயங்கும் அனைத்து ரயில்களின் காத்திருப்புப் பட்டியல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நாட்டின் பண்டிகைகள், விடுமுறை போன்ற காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன''என்றார்.
நாட்டில் பெரும்பாலான அதிவிரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு, குளிர்சாதன பெட்டிகள் அதிகரிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் முன்பதில்லாத பெட்டிகள் அதிகம் இல்லாததே ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் ஏற காரணம் எனவும் முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நேற்று நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், ''ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப் பெட்டிகளை அதிகரிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
பயணிகளின் கவனத்துக்கு; சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்; எந்தெந்த ஊர்கள்?