
புற்றுநோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். ஆனால் பல சமயங்களில் மக்கள் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள். இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடும். சிலர் இந்த அறிகுறிகளை பொதுவான பிரச்சினைகள் என கருதுகிறார்கள். எனவே உங்கள் உடலில் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக இந்த அறிகுறிகள் சில வாரங்களுக்கு மேல் நீடிக்குமானால் தாமதிக்காமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்த அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உணவு அல்லது தண்ணீர் விழுங்குவதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டால் அது உணவுக்குழாய் அல்லது தொண்டை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இது சில நாட்கள் அல்லாமல் பல வாரங்களாக தொடர்ந்தால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மலம் கழிக்கும் உணர்வு ஆனால் வெளியேறாமை, மலம் அல்லது சிறுநீரில் ரத்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது சிறுநீர் பாதையில் எரிச்சல் ஆகியவை சில வாரங்களுக்கு மேல் நீடிக்குமானால் அது சிறுநீர்ப்பை அல்லது குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம், இருமும்போது சளி அல்லது எச்சிலில் ரத்தம், மாதவிடாய் காலங்களுக்கு இடையில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவது, மார்பக காம்புகளில் இருந்து இரத்தம் அல்லது திரவங்கள் கசிதல் ஆகியவை பல்வேறு வகையான புற்று நோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம். ஒரு மச்சத்தின் அளவு அல்லது நிறத்தில் மாற்றம், ஏற்கனவே உள்ள மச்சத்தின் விளிம்புகள் சீரற்று மாறுவது, புதிய மச்சம் அல்லது புண் தோன்றி ஆறாமல் இருப்பது, சருமத்தில் அசாதாரணமான புடைப்புகள் அல்லது நிறமாற்றம் ஆகியவை தோல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
மார்பகம், அக்குள், கழுத்து, வயிறு அல்லது விதைப்பைகளில் புதிய அல்லது வளரும் கட்டிகள் வலியற்றவர்களாக தோன்றலாம். ஆனால் இவை புற்றுநோயின் முதல் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். எனவே கட்டிகளை அலட்சியமாக நினைக்காமல் மருத்துவரை அணுகி அது புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். காய்ச்சல் அல்லது சளி இல்லாமல் நீண்ட நாட்கள் நீடிக்கும் இருமல், குரலில் மாற்றம் அல்லது கரகரப்பு ஏற்படுவது ஆகியவை நுரையீரல் தொண்டை அல்லது குரல்வளை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். உடலில் புண்கள் அல்லது காயங்கள் நீண்ட நாட்களாக ஆறாமல் இருப்பது, வாய், தோல் அல்லது பிற பகுதிகளில் ஏற்படும் புண்கள் குணமடைய அதிக நேரம் எடுத்துக் கொள்வது, வாய்ப்புற்று நோய் அல்லது தோல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
காரணமற்ற எடை இழப்பு, திடீரென எடை குறைவது, ஆறு மாதங்களுக்குள் உடல் எடையில் 10 சதவீதத்திற்கும் மேல் குறைவது, கணையம், இரைப்பை, நுரையீரல் அல்லது பிற புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். திடீரென பசியின்மை ஏற்படுவது, குறைந்த அளவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பியதாக உணர்வது ஆகியவை வயிறு, கணையம் கருப்பை புற்று நோயுடன் தொடர்புடையது. போதுமான ஓய்வு எடுத்தும் கடுமையான சோர்வு ரத்தசோகை அல்லது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி காரணமாக ஏற்படலாம். இது ரத்த புற்றுநோய் குடல் புற்றுநோய்க்கான இது ஒரு அறிகுறியாக இருக்கலாம். எனவே நீண்ட சோர்வாக உணர்பவர்கள் இது இந்த அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாது.
இந்த அறிகுறிகள் அனைத்தும் புற்றுநோயின் காரணமாகவே ஏற்படும் என்பது அர்த்தமல்ல. பல சமயங்களில் இவை வேறு பொதுவான நோய்களாலும் ஏற்படலாம். எனவே இந்த அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் அல்லது அறிகுறிகள் சில வாரங்களுக்கு மேல் மோசமானால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். புற்றுநோய் சிகிச்சையைப் பொறுத்தவரை ஆரம்ப கால கண்டறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். இது பயனுள்ள சிகிச்சை பெறவும், குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.