தமிழ் திரையுகக மூத்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் இன்று (மே 17) தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 85. சென்னை அடையாறு பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் கே.ராஜன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கே.ராஜன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 1980-களில் தயாரிப்பாளராக அறிமுகமான கே. ராஜன், நடிகர் சுரேஷ் நடித்த 'பிரம்மச்சாரிகள்' (1983) உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் இருந்துள்ளார். அப்பாஸ் மற்றும் குணால் நடித்த 'உணர்ச்சிகள்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்
சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த இவர் சினிமா தொழிலாளர்களின் நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தயாரிப்பாளராக மட்டுமின்றி சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் கே.ராஜன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை பட விழாக்களிலும், பொது மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
"நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டால்தான் தயாரிப்பாளர்கள் பிழைக்க முடியும். தயாரிப்பாளர்களை அழித்துவிட்டு நடிகர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்" என்று வெளிப்படையாக பேசி பரபரப்பை உண்டாக்கினார்.
சிறு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருந்தார்
''திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வராத முன்னணி நட்சத்திரங்களை "தயாரிப்பாளர்களின் பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு, பட விளம்பரத்திற்கு வர இவர்களுக்கு என்ன திமிர்?" என நேரடியாகவே சாடியுள்ளார். அண்மைகாலமாக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்த அவர், சினிமாவின் இருண்ட பக்கங்களையும், ரகசியங்களையும் வெளிப்படையாகப் பேசி பலமுறை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனார். கே. ராஜனின் பேச்சுக்கள் சில நேரங்களில் திரையுலகினரிடையே சலசலப்பை ஏற்படுத்தினாலும், நலிவடைந்த, சிறு, குறு தயாரிப்பாளர்களுக்காகவும், தியேட்டர் உரிமையாளர்களுக்காகவும் அவர் பேசி வந்ததால் ஒருபக்கம் ஆதரவும் இருந்து வந்தது.
தற்கொலைக்கு என்ன காரணம்?
இப்படிப்பட்ட நிலையில் கே.ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. விசாரணை முடிவில் தான் இதற்கான காரணம் தெரிய வரும். இவரது மகன் பிரபுகாந்தும் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.