காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்துள்ள எச்சூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோமினிக். இவரது மகன் ஆல்பர்ட்(30). ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளராக உள்ளார். ஸ்கிராப் எடுப்பது, கட்டுமான பொருட்கள் வினியோகிப்பது, 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கழிவுகள் எடுக்கும் பணி செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ஆல்பர்ட் எச்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை முன்பாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட ஆல்பர்ட் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில், நிலை குலைந்த ஆல்பர்ட்டை முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தடுக்க வந்த அவரது நண்பர்கள் சிலரையும் வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதனையடுத்து, ஆல்பர்ட்டினை ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆல்பர்ட் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.