காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பிபிஜி.சங்கர் (42). இவர் பாஜக எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வருகிறார். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சென்னையில் நடத்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரவு காரில் தனியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கார் பூந்தமல்லி நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது பிபிஜி.சங்கரை திடீரென இரண்டு காரில் வந்த கும்பல் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பிபிஜி சங்கர் காரை வழிமறித்த கும்பல் வெடிகுண்டை வீசியுள்ளனர். அவர்களிடம் தப்பித்து ஓடிய சங்கர் தனது காரில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு ஓடினார். அந்த கொலை கும்பலும் சங்கரை விரட்டி சென்றது.
ஆனால், சங்கர் கத்தியை வைத்திருந்ததால் தன்னை கொலை செய்ய வந்தவர்களை திருப்பி தாக்க முயன்றுள்ளார். இதனால், அவரை வெட்ட முடியாமல் சுத்து போட்டியுள்ளனர். அப்போது, கொலை கும்பல் ஓட்டி வந்த கார் அவரை பின் பக்கமாக இடித்து தள்ளியது. இதனால், சரிந்து கீழே விழுந்த அவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு கட்சி கொடி கட்டிய காரில் தப்பித்துள்ளனர்.
அந்த இரண்டு கார்களும் சங்கரின் சடலத்தின் மீது இறங்கிய காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந்த கொலை சம்பவம் சினிமா மிஞ்சும் அளவிற்கு பொதுமக்கள் முன்னிலையில் நடந்துள்ளது.