மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) தனது அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் முறைகேடுகளைத் தடுக்க 'ஃபேஸ் ஆதென்டிகேஷன்' முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும், தேர்வர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இனி 'ஃபேஸ் ஆதென்டிகேஷன்' (Face Authentication) எனப்படும் முக அடையாளச் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட உள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த அதிரடி மாற்றத்தை UPSC கொண்டு வந்துள்ளது.
24
அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும்
ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமின்றி, UPSC நடத்தும் அனைத்துப் பணி நியமனத் தேர்வுகளிலும் இந்த முறை அமல்படுத்தப்படும்.
தேர்வர்கள் விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றிய புகைப்படத்துடன், தேர்வு மையத்தில் அவர்களின் முகம் நேரலையாக ஒப்பிடப்படும். இதற்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
34
வேகமான சரிபார்ப்பு
இந்த புதிய முறையின் மூலம் ஒரு தேர்வரைச் சரிபார்க்க சராசரியாக 8 முதல் 10 வினாடிகள் மட்டுமே ஆகும். இதனால் தேர்வு மையத்திற்குள் நுழையும் நேரம் மிச்சமாகும்.
செப்டம்பர் 14, 2025 அன்று நடைபெற்ற NDA, NA மற்றும் CDS ஆகிய தேர்வுகளின் போது, குருகிராமில் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையங்களில் இந்த முறை சோதனை அடிப்படையில் (Pilot Project) செயல்படுத்தப்பட்டது. இது பெரும் வெற்றியைத் தந்ததைத் தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து UPSC தலைவர் அஜய் குமார் கூறுகையில், "இந்த புதிய முறை சரிபார்ப்பு நேரத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு அம்சத்தையும் ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் முழுமையாகத் தவிர்க்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.
இனி வரும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தங்களின் புகைப்படங்களைத் தெளிவாகப் பதிவேற்றம் செய்வது அவசியமாகும். மேலும் விவரங்களுக்கு UPSC அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.