
இன்றைய காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் தியரியாகப் படிக்கும் ஒரு பாடமல்ல; அது மருத்துவமனைகள், பள்ளிகள், மற்றும் ஐடி அலுவலகங்கள் எனப் பல இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக மாறிவிட்டது. 2027-ம் ஆண்டிற்குள் உலகளவில் AI சார்ந்த வேலைவாய்ப்புகள் 40 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வெறுமனே "எனக்கு AI தெரியும்" என்று ரெஸ்யூமில் (Resume) போடுவதை விட, "நான் இந்த AI ப்ராஜெக்டை செய்துள்ளேன்" என்று நிரூபிக்கும் மாணவர்களுக்கே கார்ப்பரேட் நிறுவனங்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. கல்லூரிகளில் படிக்கும்போதே, நிஜ உலகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையிலான சில குறிப்பிட்ட 'ஜெனரேட்டிவ் AI' ப்ராஜெக்ட்களை செய்து வைப்பது, உங்கள் வேலைவாய்ப்பை பலமடங்கு அதிகரிக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்குக் கைகொடுக்கும் அந்த டாப் ப்ராஜெக்ட் ஐடியாக்கள் இதோ:
இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. இதனால் மருத்துவர்களின் வேலைப்பளு மிக அதிகம். 10 பக்கங்கள் கொண்ட கடினமான மெடிக்கல் ரிப்போர்ட்களை, டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் எளிதில் புரியும் வகையில் சிறு குறிப்புகளாக (Summaries) மாற்றும் AI சிஸ்டத்தை நீங்கள் உருவாக்கலாம். ரத்தப் பரிசோதனை முடிவுகளை அலசுவது, மருத்துவக் குறிப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பது போன்ற அம்சங்களை இதில் சேர்க்கலாம்.
கம்பெனிகளின் காலாண்டு மற்றும் வருடாந்திர நிதி அறிக்கைகளை (Financial Statements) சாதாரண மக்கள் புரிந்துகொள்வது கடினம். லாப நஷ்டக் கணக்குகள் (P&L), பேலன்ஸ் ஷீட் மற்றும் வருவாய் ட்ரெண்டுகளைப் பகுப்பாய்வு செய்து, எளிமையான சாராம்சத்தை வழங்கும் ஒரு AI கருவியை உருவாக்குவது, ஃபைனான்ஸ் மற்றும் ஐடி துறைகளில் உங்களை ஒரு படி உயர்த்திப் பிடிக்கும்.
2026-ம் ஆண்டில் இந்தியாவின் எட்டெக் (EdTech) சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் திறமைக்கு ஏற்ப, அவர்களுக்கு கடினமாக இருக்கும் பாடங்களில் பயிற்சி கேள்விகளை (Practice questions) உருவாக்குவது, பாடங்களைச் சுருக்கி வழங்குவது, மற்றும் தானியங்கி வினாடி வினாக்களை (Quiz tests) டிசைன் செய்யும் AI சிஸ்டத்தை நீங்கள் உருவாக்கினால், கல்வித்துறையில் அதற்கென தனி மவுசு உண்டு.
ஒரு வேலைக்கு நூற்றுக்கணக்கான ரெஸ்யூம்கள் வருவதால், HR-கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வேலைக்கான தகுதிகள் மற்றும் திறன்களைப் பொருத்திப் பார்த்து, தகுதியான நபர்களைத் தரவரிசைப்படுத்தும் (Ranking) ஒரு AI சிஸ்டத்தை உருவாக்குவது மிகச் சிறந்த ப்ராஜெக்ட் ஆகும். இது நேர்காணல் கேள்விகளைத் தானாகவே உருவாக்கும் திறனையும் கொண்டிருக்கலாம்.
மேற்கண்ட ப்ராஜெக்ட்கள் அனைத்தும் சுகாதாரம், கல்வி, மற்றும் நிதித்துறையில் உள்ள நிஜமான பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியவை. இதுபோன்ற டொமைன் சார்ந்த (Domain-based) ப்ராஜெக்ட்களைச் செய்வதன் மூலம், நீங்கள் வெறும் கோடராக (Coder) மட்டுமில்லாமல், ஒரு 'ப்ராப்ளம் சால்வராக' (Problem Solver) நிறுவனங்களின் கண்களுக்குத் தெரிவீர்கள். திறன்களை வளர்த்துக்கொள்ளத் துடிக்கும் இளைஞர்களே... உங்கள் கம்ப்யூட்டரைத் திறங்கள்; புதிய AI ப்ராஜெக்டை இன்றே தொடங்குங்கள்!