
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. 2026-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (NEET UG 2026) குறித்த அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தை (Syllabus) தேசியத் தேர்வுகள் முகமை (NTA) தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் மூலம், மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்ற குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஏற்கனவே கடந்த டிசம்பர் 22, 2025 அன்று இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) மூலமாகப் பாடத்திட்டத்தை இறுதி செய்திருந்தது. தற்போது, மாணவர்களின் வசதிக்காகவும், அதிகாரப்பூர்வ தகவலை உறுதி செய்யவும், அந்தப் பாடத்திட்டமானது என்டிஏ-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணையதளத்திற்குச் சென்று புதிய சிலபஸை PDF வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. என்டிஏ வெளியிட்ட பொது அறிவிப்பில், "2019 முதல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒப்புதலோடு நீட் தேர்வை என்டிஏ நடத்தி வருகிறது. 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இறுதி செய்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும். எனவே, மாணவர்கள் குழப்பமின்றித் தயாராக வேண்டும் என்பதற்காகவே இந்த சிலபஸ் எங்கள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக ஜனவரி 5-ம் தேதி, மாணவர்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்குமாறு என்டிஏ ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்போது சிலபஸும் வெளியிடப்பட்டுள்ளதால், மிக விரைவில் நீட் 2ட்026 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification) மற்றும் தேர்வு அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்டிஏ இதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு ஒன்றே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாக உள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு மே 4-ம் தேதியும், 2024 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் முறையே மே 5 மற்றும் மே 7-ம் தேதிகளிலும் நீட் தேர்வு நடைபெற்றது. இதைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் மே மாதத்தின் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.