RRB Recruitment 2026: ரயில்வேயில் அரசு வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பக் கட்டணம், சம்பளம், தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களைப் பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயின் ஆட்சேர்ப்பு வாரியங்கள், CEN 09/2026 அறிவிப்பின் கீழ் தனிப்பிரிவு பணிகளுக்கு 191 பேரைத் தேர்வு செய்ய உள்ளன. தலைமை சட்ட உதவியாளர், அரசு வழக்கறிஞர், மூத்த விளம்பர ஆய்வாளர், இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், பணியாளர் மற்றும் நல ஆய்வாளர், அறிவியல் உதவியாளர், ஆய்வக உதவியாளர் என ஏழு வகையான பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கு அதிகபட்சமாக 79 இடங்களும், ஆய்வக உதவியாளர் பணிக்கு 36 இடங்களும் உள்ளன. இந்த வேலைவாய்ப்புக்கு நவம்பர் 5-ம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 4, 2026 ஆகும்.
25
எந்தப் பணிக்கு எத்தனை இடங்கள்?
தலைமை சட்ட உதவியாளர் பணிக்கு 17 இடங்களும், அரசு வழக்கறிஞர் பணிக்கு 21 இடங்களும், மூத்த விளம்பர ஆய்வாளர் பணிக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு 79 இடங்கள், பணியாளர் மற்றும் நல ஆய்வாளர் பணிக்கு 27 இடங்கள் உள்ளன. அறிவியல் உதவியாளர் பயிற்சிப் பணிக்கு 3 இடங்களும், வேதியியல் மற்றும் உலோகவியல் ஆய்வக உதவியாளர் மூன்றாம் நிலைப் பணிக்கு 36 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 191 இடங்கள் உள்ளன. இவை தற்காலிக காலியிடங்கள் என்பதால் தேவைக்கேற்ப மாற்றம் ஏற்படலாம்.
அனைத்து பணிகளுக்கும் பிளஸ் 2 படித்திருந்தால் மட்டும் போதாது. ஆய்வக உதவியாளர் பணிக்கு இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தலைமை சட்ட உதவியாளர் பணிக்கு சட்டப் பட்டப்படிப்புடன் வழக்கறிஞராக மூன்று ஆண்டுகள் அனுபவம் தேவை. அரசு வழக்கறிஞர் பணிக்கு சட்டப் பட்டமும் வழக்கறிஞராக ஐந்து ஆண்டுகள் அனுபவமும் அவசியம். இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட மொழிப் பாடங்களுடன் முதுகலைப் பட்டம் மற்றும் மொழிபெயர்ப்புத் தகுதி தேவை. மூத்த விளம்பர ஆய்வாளர் பணிக்கு தொடர்புடைய பட்டப்படிப்பு மற்றும் மக்கள் தொடர்பு, விளம்பரம் அல்லது ஊடகப் படிப்புத் தகுதி தேவை. மற்ற பணிகளுக்கும் தனித்தனி கல்வித் தகுதிகள் உள்ளன.
வயது வரம்பு பணிக்கு ஏற்ப 18 முதல் 40 வரை மாறுபடுகிறது. தலைமை சட்ட உதவியாளர் பணிக்கு அதிகபட்ச வயது 40; அரசு வழக்கறிஞர் பணிக்கு 32; இளநிலை மொழிபெயர்ப்பாளர், மூத்த விளம்பர ஆய்வாளர், பணியாளர் நல ஆய்வாளர் பணிகளுக்கு 33; அறிவியல் உதவியாளருக்கு 35; ஆய்வக உதவியாளருக்கு 30 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது கணக்கீடு ஜனவரி 1, 2027 அடிப்படையில் இருக்கும். சம்பளம் பணிநிலைக்கு ஏற்ப மாதம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.500; குறிப்பிட்ட சலுகைப் பிரிவினருக்கு ரூ.250. கணினி வழித் தேர்வில் பங்கேற்றால், விதிகளின்படி வங்கி கட்டணங்கள் கழித்து தொகை திருப்பி வழங்கப்படும்.
55
விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது?
தகுதியுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தில் கணக்கை உருவாக்கி, தங்களுக்குப் பொருத்தமான பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் உள்ளது. தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த டிசம்பர் 6-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய டிசம்பர் 7 முதல் 16-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு கணினி வழியில் நடைபெறும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மட்டும் கூடுதலாக மொழிபெயர்ப்புத் தேர்வு உண்டு. விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பணிவாரியான தகுதிகளை முழுமையாகச் சரிபார்ப்பது அவசியம்.