
அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றனர். ஆமாங்க ஒடிசாவில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் வகையில், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (Dearness Allowance - DA) 5 சதவீதம் உயர்த்தி ஒடிசா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்திற்கு இணையாக மாநில அரசு ஊழியர்களின் வருவாயையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, மாநில அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த 5 சதவீத அகவிலைப்படி உயர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு (Retrospective Effect) அமலுக்கு வருகிறது. இதன் மூலம் இதுவரை 257 சதவீதமாக இருந்த அகவிலைப்படி விகிதம், தற்போது 262 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வினால் வழக்கமான மாநில அரசு ஊழியர்கள் மட்டுமன்றி, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கீழமை நீதிமன்ற அதிகாரிகள், ஒர்க்-சார்ஜ்டு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பயன்பெறவுள்ளனர். இதற்கான உயர்த்தப்பட்ட தொகை மற்றும் பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகை (Arrears) அனைத்தும் ஜூலை மாதச் சம்பளத்துடன் சேர்த்து ஒரே தவணையாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் ஒடிசா போன்ற பிற மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வை உடனுக்குடன் அறிவித்து வரும் நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும் அகவிலைப்படி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய உடனே, தமிழக அரசும் அதை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது நடைமுறையாக இருந்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போது அது ஜனவரி அல்லது ஜூலை மாதங்களில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இருப்பினும், சில காலங்களில் நிதி நெருக்கடி அல்லது நிர்வாகக் காரணங்களால் அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால், மத்திய அரசு அறிவித்த அதே தேதியிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைக் நிலுவையின்றி வழங்க வேண்டும் என்பதே பணியாளர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் சார்பாகப் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அதில் முதன்மையானது, அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான நிலுவைத் தொகையை (Arrears) காலம் தாழ்த்தாமல் ரொக்கமாக வழங்க வேண்டும் என்பதாகும். பல சமயங்களில் அரியர்ஸ் தொகை கணக்கில் வரவு வைக்கப்படாமல் தாமதமாவதால், ஊழியர்கள் பொருளாதார ரீதியாகப் பாதிப்படைகின்றனர்.
மேலும், அகவிலைப்படி உயர்வுடன் சேர்த்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையையும் ஊழியர்கள் முன்வைத்து வருகின்றனர். அதிகரித்து வரும் தக்காளி, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அகவிலைப்படியை நிலுவையின்றி உடனடியாக உயர்த்தினால் மட்டுமே குடும்ப வரவு செலவைச் சமாளிக்க முடியும் என்பதே தமிழக அரசு ஊழியர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.