காக்னிசண்ட் புதிய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ₹2.52 லட்சம் மட்டுமே சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், CEO ரவி குமார் சிங்கிசெட்டி ₹186 கோடி ஊதியம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் (Cognizant), புதிய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ₹2.52 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ரவி குமார் சிங்கிசெட்டி கடந்த ஆண்டு ₹186 கோடி ஊதியம் பெற்றுள்ளார் என்ற தகவல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
"காக்னிசண்ட் 2024 பேட்ச் மாணவர்களுக்கான பணியமர்த்தலை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 14. சம்பளம் ₹2.52 லட்சம்," என்று காக்னிசண்ட் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. இதுதான் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
25
இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் CEO
மிண்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, காக்னிசண்ட் நிறுவனத்தின் CEO ரவி குமார் சிங்கிசெட்டிக்கு கடந்த ஆண்டு சுமார் $22.56 மில்லியன் (₹186 கோடி) ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
52 வயதான இவர், ஜனவரி 2023-ல் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அவருக்கு வழங்கப்பட்ட $20.25 மில்லியன் (₹169.1 கோடி) மதிப்பிலான ஒருமுறை பங்கு வெகுமதியே, 2023-ல் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் CEO-வாக அவரை மாற்றியுள்ளது.
35
ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான அந்த அறிக்கையின்படி, சிங்கிசெட்டியின் ஊதியம், காக்னிசண்ட் ஊழியர்களின் சராசரி ஊதியத்தை விட 556 மடங்கு அதிகமாகும். இந்த தகவல், சமீபத்தில் காக்னிசண்ட் நிறுவனம் வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பால் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அந்த அறிவிப்பில், 2024-ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ₹2.52 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வைரலானதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் காக்னிசண்ட் நிறுவனத்தின் இந்த குறைந்த சம்பளத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
"காக்னிசண்ட் புதிய பட்டதாரிகளுக்கு 2.25 லட்சம் மட்டுமே வழங்குகிறது. ஆனால் அதன் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் 186 கோடி. இதுவே இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO-வாக அவரை ஆக்கியுள்ளது," என்று எக்ஸ் பயனர் சுவாஸ்திகா யாதவ் பதிவிட்டுள்ளார். மேலும், "20 ஆண்டுகளுக்கு முன்பு இதே 'அசத்தலான' 2.25 லட்சத்தைத்தான் வழங்கினார்கள். அனைத்துத் துறைகளிலும் குறைந்தபட்ச ஊதிய அளவு ஏன் இல்லை?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் பயனர்கள் கணக்கிட்டபடி, பிடித்தம் போக புதிய ஊழியர்களுக்கு கையில் ₹18,000 முதல் ₹19,000 வரை மட்டுமே மாதச் சம்பளம் கிடைக்கும். இது பெருநகரங்களில் வாழ்க்கையை நடத்துவதற்கு "போதாது" என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
55
பணவீக்கமும் மாதச் சம்பளமும்
"ஆண்டுக்கு 2 லட்சம் என்பது என் ஓட்டுநர் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்து சம்பாதிப்பதை விட மிகக் குறைவு," என்று இன்னொரு எக்ஸ் பயனர் குறிப்பிட்டுள்ளார்.
"பன்னாட்டு நிறுவனங்களின் வருவாய் லட்சங்களில் இருந்து பில்லியன்களுக்கும், ட்ரில்லியன்களுக்கும் அதிகரித்துவிட்டது. ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு வழங்கிய அதே சம்பளத்தைத்தான் புதிய ஊழியர்களுக்கு இன்றும் வழங்குகிறார்கள். பணவீக்கம் மற்றும் வீட்டு வாடகை உயர்வுக்கு இணையாக ஆண்டுதோறும் சம்பள உயர்வு கூட வழங்குவதில்லை," என்று மற்றொரு பயனர் சுட்டிக்காட்டியுள்ளார்.