
பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவு உள்ள மாணவர்கள், அதற்கான கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சில அமைப்புகள் பல்வேறு நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. ஆனால், இந்தத் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை. 2025 பொறியியல் சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்கள், இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கல்வி உதவித்தொகை திட்டங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, தகுதியிருந்தால் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் TNEA ஒற்றைச் சாளர முறையில் தொழிற்கல்வி படிப்புகளில் சேரும்போது, அவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. இதில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் என அனைத்தும் அடங்கும். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் பொறியியல் கனவை நனவாக்குங்கள்.
பொறியியல் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி) TNEA ஒற்றைச் சாளர முறை மூலம் சேர்க்கை பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ், கல்விக் கட்டணம் மட்டுமே சலுகையாக வழங்கப்படும். விண்ணப்பதாரரின் அண்ணன் அல்லது தங்கை ஏற்கனவே இந்தக் கல்விக் கட்டண சலுகையைப் பெற்றிருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் நீங்களே முதல் பட்டதாரியாக உருவாக இந்தத் திட்டம் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) நிர்வகிக்கும் இத்திட்டத்தின் கீழ், தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்கள் மொத்த இடங்களில் குறைந்தது 5% இடங்களுக்கு (பாடநெறி வாரியாக) கல்விக் கட்டண சலுகை அளிக்க வேண்டும். இந்தக் கல்விக் கட்டணத்தை தனியார் கல்வி நிர்வாகமே ஏற்கும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள். நீங்கள் தனியார் பொறியியல் நிறுவனத்தில் சேரத் திட்டமிட்டிருந்தால், இந்தத் திட்டம் குறித்து விசாரித்து உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினருக்கு 10 ஆம் வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தக் கல்வி உதவித்தொகை திட்டம், நிதிச் சுமை இல்லாமல் உயர்கல்வி பெற உதவுகிறது. குறைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி சேவை மைய எண் 1800-425-0110 ஐ தொடர்பு கொள்ளலாம்.
ஆகவே, பொறியியல் சேர்க்கையில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வங்கிக் கடனை மட்டும் நம்பியிருக்காமல், இந்த இலவச கல்வி நிதியுதவி திட்டங்களில் விண்ணப்பித்து, கல்வியின் தரத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.