கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் உயிரிழந்தால், அவரது நிலுவைக் கடனை குடும்பத்தினர் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த வேண்டிய சட்டப்பூர்வக் கட்டாயம் இல்லை, என்று டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்டால், அவர் பயன்படுத்திய கார்டின் நிலுவைக் கடன் என்னவாகும்? அந்தக் கடனை அவரது மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர் கட்டாயம் செலுத்த வேண்டுமா? போன்ற கேள்விகள் பலருக்கும் எழுகின்றன. குறிப்பாக, குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டுபவர் உயிரிழக்கும்போது, அவர் விட்டுச்செல்லும் கடன்கள் குடும்பத்தினருக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சூழலில் குடும்பத்தினருக்கு இருக்கும் சட்டப்பூர்வப் பொறுப்புகள் மற்றும் வங்கிகளின் நடைமுறைகள் குறித்து விரிவாக பார்போம்.
25
சட்டப்பூர்வ விதிகள் & குடும்பத்தினரின் பொறுப்புகள்
கிரெடிட் கார்டு கடன் என்பது எந்தவித பிணையமும் இல்லாத 'பிணையமில்லா கடன்' வகையைச் சேர்ந்தது. எனவே, கார்டு வைத்திருப்பவர் உயிரிழந்துவிட்டால், அவரது கடனை குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த வருமானத்திலிருந்தோ அல்லது சொந்தச் சேமிப்பிலிருந்தோ செலுத்த வேண்டிய கட்டாயம் பொதுவாக இல்லை. அதேநேரம், உயிரிழந்தவர் விட்டுச்சென்ற சொத்துகளிலிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிகளுக்கு உரிமை உள்ளது. சட்டப்பூர்வ வாரிசுகளின் பொறுப்பு என்பது, அவர்கள் உயிரிழந்தவரிடமிருந்து பெற்ற பரம்பரைச் சொத்துகளின் மதிப்புக்கு மட்டுமே உட்பட்டதாகும். இதனை டெல்லி உயர் நீதிமன்றத்தின் 2026-ஆம் ஆண்டு தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
35
சொத்துகள் இல்லாத பட்சத்தில் என்ன நடக்கும்?
உயிரிழந்தவரின் பெயரில் எவ்விதச் சொத்துகளோ அல்லது வங்கிச் சேமிப்புகளோ இல்லாதபட்சத்தில், அந்தக் கடனை வசூலிப்பதில் வங்கிக்குச் சிக்கல் ஏற்படும். இத்தகைய சூழலில், நிலுவைத் தொகையை வசூலிக்க வழியில்லை என்பதால், வங்கி தனது கணக்கு நடைமுறைகளின்படி அந்த நிலுவையைத் தள்ளுபடி செய்யலாம். இருப்பினும், அந்த கிரெடிட் கார்டு கடனுக்கு யாராவது இணைப் பொறுப்பேற்றிருந்தாலோ (Co-applicant / Joint Cardholder) அல்லது உத்தரவாதம் அளித்திருந்தாலோ, அவர்கள் மீதான பொறுப்பு ஒப்பந்த நிபந்தனைகளைப் பொறுத்து மாறுபடும்.
உயிரிழந்த பின் குடும்பத்தினர் உடனடியாகச் செய்ய வேண்டியவை
வங்கிக்குத் தகவல் தெரிவித்தல்: கார்டு வைத்திருப்பவர் உயிரிழந்தவுடன், சம்பந்தப்பட்ட வங்கிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். கார்டை முடக்குதல் - இறப்புச் சான்றிதழைச் (Death Certificate) சமர்ப்பித்து, கிரெடிட் கார்டு கணக்கை மேலும் பயன்படாதவாறு முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிரெடிட் கார்டுடன் கடன் பாதுகாப்புக் காப்பீடு ஏதேனும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். காப்பீடு இருந்தால், அதன் நிபந்தனைகளுக்கு ஏற்ப காப்பீட்டு நிறுவனம் மூலமாக நிலுவைக் கடனை அடைக்க வாய்ப்புள்ளது.
55
கடன் வசூல் ஏஜெண்ட்கள் நெருக்கடி கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
கடன் வசூல் ஏஜெண்ட்கள் (Recovery Agents) குடும்பத்தினரைத் தொடர்புகொண்டால், நிலுவைத் தொகை மற்றும் அது தொடர்பான முறையான ஆவணங்களை வங்கியிடம் கேட்டுப் பெற வேண்டும். உங்களுக்குச் சட்டப்பூர்வப் பொறுப்பு இல்லாத நிலையில், உங்களது சொந்தப் பணத்திலிருந்து கடனைச் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் சட்ட ஆலோசனை பெறலாம். மேலும், வசூல் ஏஜெண்ட்கள் தேவையற்ற முறையில் நெருக்கடியோ அல்லது தொந்தரவோ கொடுத்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.