யுபிஐ vs யுபிஐ லைட்: டீ முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை; தினசரி செலவுகளுக்கு எதை பயன்ப்டுத்தலாம்?

Published : Oct 02, 2026, 02:51 PM IST

தினசரி பரிவர்த்தனைகளுக்கு வழக்கமான யுபிஐ, யுபிஐ லைட் , கிரெடிட் கார்டு ஆன் யுபிஐ ஆகிய 3 முறைகள் வெவ்வேறு விதமாகச் செயல்படுகின்றன.

PREV
15
யுபிஐ, யுபிஐ லைட் , கிரெடிட் கார்டு யுபிஐ: எது சிறந்தது?

ஒரு கப் டீ வாங்குவது முதல் மளிகைப் பொருட்கள், ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்துக்கும் இப்போது பணப் பையை (Wallet) வெளியே எடுக்கத் தேவையில்லை. ஆனால், உங்கள் யுபிஐ (UPI) செயலியில் ஒன்றுக்கும் மேற்பட்ட செலுத்தும் முறைகள் இருந்தால் எதைப் பயன்படுத்துவது என்ற குழப்பம் எழலாம். வழக்கமான யுபிஐ, யுபிஐ லைட் (UPI Lite) அல்லது ரூபே (RuPay) கிரெடிட் கார்டை யுபிஐ உடன் இணைத்துச் செலுத்துவது என 3 வழிகள் உள்ளன.

இந்த 3 விருப்பங்களும் வெவ்வேறு விதமாகச் செயல்படுகின்றன. வழக்கமான யுபிஐ நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும். யு.பி.ஐ லைட் சிறிய தொகைகளைச் செலுத்த வடிவமைக்கப்பட்டு, அதில் நீங்கள் ஏற்றி வைக்கும் இருப்பிலிருந்து (Balance) பணத்தைப் பயன்படுத்தும். அதேசமயம், யு.பி.ஐ உடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டு, தகுதியுள்ள ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் வணிகர்களுக்குத் தங்களது கடன் வரம்பைப் (Credit Limit) பயன்படுத்திப் பணம் செலுத்த அனுமதிக்கிறது.

25
வழக்கமான யுபிஐ - வங்கிக் கணக்கிலிருந்து நேரடிப் பணம்

வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைக்கு, பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். QR கோடை ஸ்கேன் செய்தோ, யுபிஐ ஐடியை (UPI ID) உள்ளிட்டோ அல்லது பிற விருப்பங்கள் மூலமாகவோ கட்டணம் செலுத்தலாம். வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணம் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. மேலும், மற்றொரு நபருக்கு (Person to Person) பணம் அனுப்புவதற்கும் வழக்கமான யுபிஐ உதவும். கிரெடிட் கார்டு யுபிஐ முறையில் நபர்களுக்குப் பணம் அனுப்ப முடியாது. இதன் ஒரே குறைபாடு, ஒவ்வொரு பரிவர்த்தனையும் உங்கள் வங்கிக் கணக்கு இருப்பைக் குறைக்கும். இருப்பினும், தினசரி செலவுகளைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு, கணக்கு இருப்பு உடனுக்குடன் குறைவதைப் பார்ப்பது செலவைக் கட்டுப்படுத்த ஒரு நல்ல வழிமுறையாகவும் இருக்கும்.

35
யுபிஐ லைட் - சிறு தொகைப் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றது

சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்காகவே யு.பி.ஐ லைட் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறு பரிவர்த்தனைக்கும் யுபிஐ பின் (UPI PIN) எண்ணை உள்ளிடுவதற்குப் பதிலாக, யுபிஐ லைட் இருப்பில் உள்ள தொகையிலிருந்து நேரடியாகப் பணம் செலுத்தலாம். ஆரம்பத்தில் NPCI விதிகளின்படி, யுபிஐ லைட் மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ. 200 என்றும், மொத்த இருப்பு வரம்பு ரூ. 2,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. தற்பொழுது இந்த வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எனவே உங்கள் வங்கி அல்லது யுபிஐ ஆப் காட்டும் தற்போதைய வரம்பைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. டீ, சிற்றுண்டி வாங்குவது, உள்ளூர் போக்குவரத்து, சிறிய கடைகளில் பொருட்கள் வாங்குவது போன்ற நாள் முழுவதும் பல சிறு பரிவர்த்தனைகளைச் செய்பவர்களுக்கு யுபிஐ லைட் மிகவும் வசதியானது. மேலும், இந்தச் சிறு செலவுகள் உங்கள் முக்கிய வங்கிக் கணக்கு அறிக்கை (Bank Statement) பரிவர்த்தனைகளோடு கலக்காமல் தனியாக இருக்கும்.

45
கிரெடிட் கார்டு யு.பி.ஐ பயன்படுத்தும் முறை

ரூபே கிரெடிட் கார்டை யு.பி.ஐ உடன் இணைப்பது, வணிகர்களுக்குப் (Merchants) பணம் செலுத்த மற்றொரு வழியை வழங்குகிறது. இதில் உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து உடனடியாகப் பணம் போகாது; மாறாக, கிரெடிட் கார்டில் இருந்து தொகை கழிக்கப்படும். ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தி, சலுகைப் புள்ளிகளைப் (Rewards) பெற விரும்புகிறவர்களுக்கும், பில் செலுத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் இது கடனாகப் பெறப்படும் பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறுதித் தேதிக்குள் பில் தொகையை முழுமையாகச் செலுத்தாவிட்டால், வட்டி மற்றும் பிற கட்டணங்கள் சேர்ந்து செலவை அதிகமாக்கிவிடும். யுபிஐ உடன் இணைக்கப்பட்ட ரூபே கிரெடிட் கார்டின் பரிவர்த்தனை வரம்பு, கார்டு வழங்கிய நிறுவனத்தின் கிரெடிட் வரம்பு, யுபிஐ ஆபத்து மேலாண்மை வரம்பு மற்றும் வாடிக்கையாளர் அமைக்கும் வரம்புகளுக்கு உட்பட்டது என NPCI தெரிவிக்கிறது.

55
இதில் எதைப் பயன்படுத்த வேண்டும்?

உங்கள் சொந்தப் பணத்திலிருந்து சாதாரண பரிவர்த்தனைகளைச் செய்ய வழக்கமான யுபிஐ எளிமையான தேர்வாகும். அடிக்கடி சிறிய பரிவர்த்தனைகளைச் செய்பவர்களுக்கும், அதற்குத் தனியாக இருப்பு வைத்திருக்க விரும்புபவர்களுக்கும் யு.பி.ஐ லைட் பொருத்தமானது. கிரெடிட் கார்டு பில் செலுத்தும் சுழற்சியைப் புரிந்து கொண்டு, உரிய நேரத்தில் பில் செலுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு, தகுதியான வணிகர் கட்டணங்களுக்குக் கிரெடிட் கார்டு யுபிஐ பயனுள்ளதாக இருக்கும்.

இவற்றில் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், பணம் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதே ஆகும். வழக்கமான யுபிஐ வங்கி இருப்பைப் பயன்படுத்துகிறது, யுபிஐ லைட் அதற்கென ஒதுக்கப்பட்ட இருப்பைப் பயன்படுத்துகிறது, கிரெடிட் கார்டு யுபிஐ உங்களுக்கான கடன் வரம்பைப் (Credit Line) பயன்படுத்துகிறது. எனவே, இதில் எது "சிறந்தது" என்பதை விட, உங்கள் கொள்முதல் மற்றும் செலவுப் பழக்கத்திற்கு எந்தக் கட்டண முறை பொருந்தும் என்பதைப் பொறுத்தே தேர்வு செய்ய வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories