
மாதம் குறைந்த அளவு முதலீடு செய்து அதிக ஓய்வூதியம் கிடைக்கும் என்றால் அதற்கான திட்டங்களை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம். மாதம் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டினால் நல்லதுதானே. சரியாக திட்டமிட்டு மாதம் 10 ஆயிரம் முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் 4 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும். 25 வயதான ஒருவர் SIP திட்டத்தில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய தொடங்க வேண்டும். ஆண்டுக்கு இந்த தொகை 10 சதவீதம் உயர்த்தி அதனை ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் தலா ரூ.2,500 வீதம் லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட், ஃபிளேக்ஸி கேப் ஃபண்ட், மல்டி அசெட் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து வரவேண்டும்.
இந்த முதலீட்டுக்கு வருடத்திற்கு சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். இதை வைத்துக் கணக்கீடு செய்து பார்த்தால், 30 வயதில் அந்த நபரின் கார்ப்பஸ் மதிப்பு 9.25 லட்சம் ரூபாயாக இருக்கும். இதே 35-வது வயதில் 29.8 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்த தொகை 40 வயதில் 72 லட்சம் ரூபாயாகவும், 45 வயதில் 1.54 கோடி ரூபாயாகவும் இருக்கும். தற்போது தான் கூட்டு வட்டியின் பலனை முதலீட்டாளர் பெறலாம். ஏனெனில் முதலீட்டாளரின் 50-வது வயதில் 3.11 கோடி ரூபாயும், 55-வது வயதில் 6 கோடி ரூபாயும், 60-வது வயதில் 11.3 கோடி ரூபாயாகவும் கார்ப்பஸ் பெருகி இருக்கும்.
முதலீட்டு தொகை 60-வது வயதில் 11 கோடியே 30 லட்சம் ரூபாயாக இருக்கும் நிலையில், இப்போது 4% திரும்ப பெறுதல் விதிமுறையை எஸ்.டபள்யூ.பி (SWP) மூலம் தொடரலாம். விதிமுறை 4 என்பது ஓய்வு பெற்ற ஒரு தனி நபர் தனது முதலீட்டுக் கலவையின் மொத்த மதிப்பில் ஆண்டுக்கு 4% திரும்ப பெறுவதை குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஒருவர் பணி ஓய்வுக் காலத்தில் தனக்கு தேவையான நிதியை பென்ஷன் போல் பெற முடியும்.
மொத்த தொகையை கணக்கிட்டு நமக்கு தேவையான அளவை பயன்படுத்தினால் அது நமது போதிய பணத்தேவையை பூர்த்தி செய்யும். ரூ.11.3 கோடியில் 4% என்பது 45.2 லட்சம் ரூபாய் ஆகும். இதை மாதத்துக்கு கணக்கிடும்போது, மாதம் 3.75 லட்சம் ரூபாயை பெற முடியும். இதன் மூலம் பணி ஓய்வுக் காலத்தில் வாழ்க்கையின் பிற்பகுதியை, சந்தோஷமாக எதிர்கொள்ள முடியும்.
அதில் கிடைக்கும் 4%-க்குள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றால், அத்தகையவர்களுக்கு விதிமுறை 4 என்பது பொருந்தும். இது ஒவ்வொரு முதலீட்டாளரின் தேவையை பொறுத்து மாறுபடும். ஆக, அவரவர் தேவைக்கு ஏற்ப சரியான ஆலோசனையுடன் திட்டமிடுதல் என்பது பணி ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிக்க உதவிகரமாக இருக்கும். மேலும் முதலீட்டாளர்கள் இளமை காலத்தில் முதலீட்டை திட்டமிடும்போது மிகப் பெரிய கார்ப்பஸ்-ஐ உருவாக்க முடியும். இதன் மூலம் விதிமுறை 4 சரியாக செயல்படலாம்.
ஒருவர் 40 வயதில் தான் பணி ஓய்வுக் காலத்துக்கு துவங்குகிறார் என்றால் அவர் ரூ. 1 கோடியை தான் தொகுப்பு நிதியாக சேர்க்க முடியும். அப்போது விதிமுறை 4%-ன் படி அவர் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் எடுத்து செலவு செய்ய முடியும். அதாவது மாதம் 33,335 ரூபாய் எடுத்து செலவு செய்யலாம். அது 20 ஆண்டுகள் கழித்து பணி ஓய்வுக் கால செலவுக்கு போதுமானதாக இருக்கும் என உறுதியாக கூறி விட முடியாது.
ஓய்வு காலத்திற்கான வயது வெகு தூரம் இருந்தாலும், ஓய்வூதிய திட்டமிடல் அவசியமான ஒன்று. இளமை காலத்திலேயே முதலீட்டை தொடங்கும்போது, பவர் ஆஃப் காம்பவுண்டிங் (Power of Compounding) என்கிற கூட்டு வளர்ச்சியின் பலனை சிறப்பாக பெற உதவும்.இதன் மூலம் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு பெரிய கார்ப்பஸை உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் சிறிதாக நினைக்கும் தொகை கூட, ஓய்வு காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கும். ஆனால் முதலீட்டை தாமதமாக தொடங்கும்போது, அதிகளவிலான முதலீட்டை செய்ய வேண்டும். கூட்டு வட்டியின் பலனும் குறைவாகவே இருக்கும். ஆக சரியான திட்டமிட்டு முன்கூட்டியே முதலீட்டை திட்டமிட்டு தொடங்கிவிட வேண்டும்.
வீட்டிற்கு வாடகை கொடுப்பது போலவே, மாதாமாதம் இஎம்ஐ கட்டுவதை போலவே நாம் ஒரு சிறிய தொகையை ஓய்வுகாலத்திற்காக ஒதுக்கினால் அது நம்மை வயதான காலத்தில் பெரிய உதவி செய்யும்.