Business Startup: ரூ.10,000 முதலீட்டில் ஸ்டார்ட் அப்.! வருமானம் பெருக்க வழி இதோ.! தொழில் வளர்க்க லோன் பெறுவது எப்படி?

Published : Oct 01, 2026, 10:58 AM IST

ரூ.10 ஆயிரத்தில் சிறு தொழில் தொடங்குவது எப்படி? மாதம் ரூ.30,000 வரை வருமானம் பெறும் வாய்ப்புகள், தொழிலை விரிவுபடுத்த முத்ரா உள்ளிட்ட கடன் திட்டங்களில் எவ்வளவு லோன் கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட முழு விவரங்கள்.

PREV
17
ரூ.10 ஆயிரம் இருக்கா?! அப்போ பிஸ்னஸ் ஆரமிக்கலாமுங்க.!

சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், “தொழில் தொடங்க லட்சக்கணக்கில் பணம் வேண்டும்” என்ற எண்ணம் காரணமாக பலர் முயற்சியையே தொடங்காமல் இருக்கிறார்கள். உண்மையில், வீட்டில் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி சிறிய அளவில் தொடங்கி, வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும்போது தொழிலை படிப்படியாக விரிவுபடுத்த முடியும்.

குறிப்பாக உணவுப் பொருட்கள், ஸ்நாக்ஸ், வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் போன்ற தொழில்களை குறைந்த முதலீட்டில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆரம்பத்தில் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்து மூலப்பொருட்கள், பேக்கிங் பொருட்கள் மற்றும் சிறிய அளவிலான விளம்பரத்துடன் தொடங்கலாம்.

27
முதலில் சிறிய அளவில் தொடங்குங்கள்!

முறுக்கு, தட்டை, மிக்சர், காரசேவ், கடலை மிட்டாய், சிறுதானிய ஸ்நாக்ஸ் போன்ற பொருட்களில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றைத் தேர்வு செய்து தொடங்கலாம். ஒரே நேரத்தில் பல பொருட்களை தயாரிப்பதைவிட, ஒன்று அல்லது இரண்டு பொருட்களில் தரத்தை உறுதி செய்வது நல்லது.

முதலில் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், குடியிருப்பு குழுக்கள் மற்றும் WhatsApp மூலம் விற்பனையைத் தொடங்கலாம். வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்டு சுவை, பேக்கிங் மற்றும் விலையை தேவைக்கேற்ப மாற்றலாம்.

37
மாதம் ரூ.30 ஆயிரம் கிடைக்குமா?

ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ.30 ஆயிரம் நிச்சயம் கிடைக்கும் என்று கூற முடியாது. விற்பனை அளவு, லாப விகிதம், மூலப்பொருள் செலவு, போக்குவரத்து, பேக்கிங் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்தே உண்மையான வருமானம் அமையும்.

ஆனால் சிறிய அளவில் தொடங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்து, கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை மீண்டும் தொழிலில் முதலீடு செய்தால் தொழிலை படிப்படியாக வளர்க்க முடியும்.

47
தொழிலை விரிவுபடுத்த கடன் பெற முடியுமா?

ஆம். தொழில் ஓரளவு நிலையாகச் செயல்படத் தொடங்கிய பிறகு, கூடுதல் இயந்திரம் வாங்க, மூலப்பொருட்கள் அதிகமாக வாங்க, பேக்கிங் வசதிகளை மேம்படுத்த அல்லது சிறிய கடை அமைக்க வங்கிக் கடனை பரிசீலிக்கலாம்.

இதற்கு பிரதமரின் முத்ரா திட்டம் (PMMY) ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் சிறு தொழில்களுக்கு அடமானம் இல்லாத கடன் வசதி உள்ளது. தற்போதைய பிரிவுகளின்படி, சிசு (Shishu) – ரூ.50,000 வரை, கிஷோர் (Kishor) – ரூ.50,000க்கு மேல் ரூ.5 லட்சம் வரை, தருண் (Tarun) – ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறும் வகைகள் உள்ளன. ஏற்கனவே Tarun பிரிவில் கடன் பெற்று அதை முறையாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு Tarun Plus மூலம் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை கடன் பெறும் வாய்ப்பு உள்ளது.

57
யாரிடம் விண்ணப்பிக்கலாம்?

முத்ரா கடன்கள் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பிராந்திய கிராம வங்கிகள், சிறு நிதி வங்கிகள் உள்ளிட்ட பல கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. கடன் தொகை என்பது திட்டத்தின் தன்மை, வருமானம், திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளிட்ட வங்கியின் மதிப்பீட்டைப் பொறுத்து மாறுபடும். எனவே “அனைவருக்கும் ரூ.10 லட்சம் அல்லது ரூ.20 லட்சம் கிடைக்கும்” என்று கருதக்கூடாது.

விண்ணப்பிக்கும்போது தொழில் பற்றிய அடிப்படை விவரங்கள், செலவு மதிப்பீடு, விற்பனை மற்றும் வருமான விவரங்கள், வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வங்கி கேட்கலாம். தொழில் ஏற்கனவே இயங்கி வந்தால் விற்பனைப் பதிவுகள் மற்றும் பணப்புழக்க விவரங்களும் உதவியாக இருக்கலாம்.

67
PMEGP மூலமும் வாய்ப்பு

தொழிலை பெரிய அளவில் அமைக்க திட்டமிடுபவர்கள் PMEGP (Prime Minister’s Employment Generation Programme) திட்டத்தையும் பரிசீலிக்கலாம். தற்போதைய வழிகாட்டுதலின்படி, புதிய திட்டங்களுக்கு Manufacturing பிரிவில் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரையிலும், Business/Service பிரிவில் ரூ.20 லட்சம் வரையிலும் திட்டச் செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் வங்கிக் கடனுடன் அரசின் margin money subsidy விதிகளும் பொருந்தலாம். தகுதி மற்றும் மானிய அளவு திட்டம் மற்றும் பயனாளி வகையைப் பொறுத்து மாறுபடும்.

77
கடன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்!

தொழில் நன்றாக ஓடுகிறது என்பதற்காக உடனடியாக பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டிய அவசியமில்லை. மாதம் எவ்வளவு விற்பனை நடக்கிறது, உண்மையான லாபம் எவ்வளவு, மாத தவணையை எவ்வளவு செலுத்த முடியும் என்பதை முதலில் கணக்கிட வேண்டும்.

கடனைப் பயன்படுத்தி வருமானம் உருவாக்கக்கூடிய இயந்திரம், மூலப்பொருள் அல்லது விற்பனை வசதிகளில் முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கலாம். தனிப்பட்ட செலவுகளுக்காக தொழில் கடனைப் பயன்படுத்தாமல் இருப்பதும் முக்கியம்.

ரூ.10 ஆயிரத்தில் தொடங்குவது இலக்கு அல்ல; அந்த சிறிய முயற்சியை நிலையான தொழிலாக மாற்றுவதுதான் இலக்கு. முதலில் சிறிய அளவில் தொடங்கி, வாடிக்கையாளர்களை உருவாக்கி, லாபத்தை மீண்டும் தொழிலில் முதலீடு செய்து, தேவையான நேரத்தில் சரியான கடன் வசதியைப் பயன்படுத்தினால் அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கான சிறு தொழிலை படிப்படியாக வளர்க்க முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories