
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவில் (NVIDIA) கடந்த சில நாட்களாக அரங்கேறிய சம்பவங்கள் சர்வதேச தொழில்நுட்ப உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) ஜென்சன் ஹுவாங் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளால் பதவி விலகிய நிலையில், தற்போது மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, முதலில் அவர் பதவி விலகியதை ஏற்றுக்கொண்ட இயக்குநர் குழு, பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு அவரை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியுள்ளது. இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் அமெரிக்க அரசியல் அழுத்தம், சீனா தொடர்பான உளவுத்துறை சந்தேகங்கள், நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் எனப் பல முக்கிய விவகாரங்கள் உள்ளன.
அப்படியென்ன சர்ச்சை? ஜென்சன் ஹுவாங் ஏன் பதவி விலகினார்? மீண்டும் அவரையே நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? முழுப் பின்னணியைப் பார்க்கலாம்.
என்விடியா நிறுவனம் என்றால் என்ன?
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று. AI கணினிகளுக்கான GPU சிப்கள் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
1993-ம் ஆண்டு என்விடியா நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் இணை நிறுவனர்களில் ஜென்சன் ஹுவாங்கும் ஒருவர். கேமிங் கிராபிக்ஸ் கார்டுகள் தயாரிப்பில் தொடங்கி, தற்போது AI சிப் தொழில்நுட்பத்தில் உலகளவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை இயக்குவதற்குத் தேவையான தரவு மையங்களிலும் என்விடியாவின் GPU சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜென்சன் ஹுவாங் ஏன் பதவி விலகினார்?
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த ஜென்சன் ஹுவாங், நவம்பர் 12 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது பதவி விலகலுக்குப் பின்னணியில் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் மட்டுமின்றி, வெளிநாட்டு உளவுத்துறை தொடர்பான சந்தேகங்களும் எழுந்தன.
அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் சீனாவுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்ற சீனத் தொழிலதிபர் குறித்தும், அவருக்கும் ஜென்சன் ஹுவாங்குக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் சர்ச்சை எழுந்தது.
இதனால் நிறுவனத்தின் நடத்தை விதிமுறைகள், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை தொடர்பான கேள்விகள் எழுந்ததை அடுத்து ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முக்கியமாக: ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல.
ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் குழு அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது.
அவருக்குப் பதிலாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான (CFO) கோலெட் கிரெஸ் (Colette Kress) இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கோலெட் கிரெஸ் 2013 ஆம் ஆண்டு முதல் என்விடியாவின் நிதிப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்து வருபவர்.
ஜென்சன் ஹுவாங் மீண்டும் சிஇஓவாக வர விரும்புவதாகத் தெரிவித்தபோதும், இயக்குநர் குழு முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்தது. ஜென்சன் ஹுவாங் மீண்டும் என்விடியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பலரும், முதலீட்டாளர்களும் ஹுவாங் மீண்டும் நிறுவனத்தை வழிநடத்த வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். அவரை மீண்டும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட ஆன்லைன் மனுவில் 1.8 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (நவம்பர் 23) ஆம் தேதி என்விடியா இயக்குநர் குழு தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஜென்சன் ஹுவாங்குடன் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் சந்திப்புகள் நடத்தியது. இதில், அவருடைய விளக்கங்கள் மற்றும் நிறுவனத்தை வழிநடத்தும் திறன் குறித்து இயக்குநர் குழு திருப்தி அடைந்தது.
அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. மீண்டும் அவரை நியமிப்பதால் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை என்ற நம்பிக்கைக்கு வந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் இயக்குநர் குழு ஒருமனதாக அவரை மீண்டும் நியமிக்க முடிவு செய்தது.
மீண்டும் என்விடியா சிஇஓவான ஜென்சன் ஹுவாங்
அதன்படி, ஜென்சன் ஹுவாங் மீண்டும் நிறுவனத்தின் தலைவர் (President), தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர் (Board Director) ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தலையீடு ஏன் முக்கியமானது?
இந்த நியமனத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பங்கு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜென்சன் ஹுவாங் மீண்டும் பதவிக்கு வருவதற்கு தனது தலையீடு முக்கியமானதாக இருந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நியமிக்கப்பட்டாலும் சர்ச்சை முடிந்துவிட்டதா?
ஜென்சன் ஹுவாங் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டாலும், அவர் தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வரவில்லை.
சுயாதீன விசாரணைக் குழு
ஜென்சன் ஹுவாங் வெளிநாட்டு உளவுத்துறை முயற்சியின் இலக்காக இருந்தாரா என்பது குறித்து விசாரிக்க, சுயாதீன இயக்குநர்கள் மட்டுமே இடம்பெறும் குழுவை நிறுவனம் அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக வெளிப்புற சட்ட ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுக் குழு
அமெரிக்காவின் ஏற்றுமதி விதிமுறைகள், தேசியப் பாதுகாப்பு மற்றும் சிப் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளை கண்காணிக்கத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய இணக்க அதிகாரி நியமனம்
நிறுவனத்தின் சட்ட விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக புதிய தலைமை இணக்க அதிகாரி (Chief Compliance Officer) ஒருவரை நியமிக்கவும் என்விடியா திட்டமிட்டுள்ளது.
அரசின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு
நிறுவனம் தொடர்பாக நடைபெறும் அரசின் விசாரணைகள் மற்றும் கேள்விகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டாலும் அவருக்கு எதிரான சுயாதீன விசாரணை தொடரும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது
ஜென்சன் ஹுவாங் மீண்டும் வந்ததால் பங்குச்சந்தையில் என்ன மாற்றம்?
ஜென்சன் ஹுவாங் மீண்டும் சிஇஓவாக நியமிக்கப்பட்ட செய்தி வெளியானதும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது. என்விடியா பங்குகள் ஒரே நாளில் 31.5 சதவீதம் உயர்ந்ததாக கூறப்படுகிரது.
மொத்தத்தில், சர்ச்சையால் பதவி விலகிய ஜென்சன் ஹுவாங், அமெரிக்க அரசியல் தலையீடு மற்றும் இயக்குநர் குழுவின் திடீர் முடிவு காரணமாக மீண்டும் என்விடியாவின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார். ஆனால் அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு இன்னும் முழுமையான முடிவு கிடைக்கவில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.