UPI transactions
ஏப்ரல் 1 முதல்:
ஏப்ரல் 1 முதல், செயலிழந்த மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட UPI ஐடிகள் வேலை செய்யாது. இந்திய பேமெண்ட்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்த ஐடிகளை பயன்பாட்டில் இருந்து அகற்ற உள்ளது. இதனால் செயலிழந்த மொபைல் எண்களைக் கொண்ட பயனர்கள் Google Pay, Paytm, PhonePe போன்ற ஆன்லைன் பேமெண்ட் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த முடியாது.
UPI IDs
பாதிக்கப்படக்கூடிய பயனர்கள் யார்?
தங்கள் மொபைல் எண்களை மாற்றிய பின்பு, அதை தங்கள் வங்கியில் அப்டேட் செய்யாத பயனர்கள் UPI ஐடியை இழப்பார்கள். வேறு ஒருவருக்கு எண்களை மறுஒதுக்கீடு செய்த UPI பயனர்களும் தங்கள் ஐடியை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
போன் கால், எஸ்.எம்.எஸ். அனுப்புதல் போன்ற சேவைகளுக்குப் பயன்படுத்தப்படாத மொபைல் எண்களை வைத்திருப்பவர்களும் UPI ஐடியை பயன்படுத்த முடியாமல் போய்விடும்.
UPI payments
UPI ஐடியை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதை பயனர்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், பயனர்கள் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்ணை செயல்படுத்த வேண்டும் என என்.பி.சி.ஐ. பரிந்துரைக்கிறது.
UPI ஐடியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயலற்றதாக இருந்தால், புதிய மொபைல் எண்ணைப் பெற்று அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்.
NPCI rules
NPCI நடவடிக்கைக்கான காரணம் என்ன?
பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, செயலிழந்த மொபைல் எண்களின் UPI ஐடியை அகற்ற NPCI முடிவு செய்துள்ளது. பெரும்பாலான பயனர்கள் தங்கள் எண்களை மாற்றி, பழைய எண் செயலிழந்த பின்பும் தங்கள் UPI ஐடிகளை நீக்க மறந்துவிடுகிறார்கள். இது எதிர்காலத்தில் மோசடி செய்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
இத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க, NPCI வங்கிகள் மற்றும் பேமெண்ட் அப்ளிகேஷன்களின் UPI நெட்வொர்க்கிலிருந்து இந்த செயலிழந்த மொபைல் எண்களை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
NPCI guidelines
வங்கிகளுக்கு NPCI அறிவுறுத்தல்:
செயல்படாத, செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது வேறு ஒருவருக்கு மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் எண்களை தொடர்ந்து கண்காணித்து அகற்றுமாறு வங்கிகள் மற்றும் பேமெண்ட் ஆப் நிறுவனங்களை NPCI கேட்டுக்கொண்டுள்ளது. சேவைகளை ரத்து செய்வதற்கு முன், இது குறித்து பயனர்களுக்கு அறிவிப்பை அனுப்பவும் அறிவுறுத்தியிருக்கிறது.
பயனர்கள் தங்கள் UPI ஐடியை இழக்கமால் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், மோசடி அபாயத்தைத் தவிர்க்க இந்த மாத இறுதியுடன் அந்த எண்களுக்குரிய UPI ஐடி அகற்றப்படும்.