இந்திய நிதித்துறையில் ஏப்ரல் 1, 2026 முதல் மிகப்பெரிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. பழைய 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் வருமான வரி விதிகள் 2026 ஆகியவை நடைமுறைக்கு வருகின்றன. இது சாதாரண வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தும் முறையிலும் சில முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
வருமான வரித் துறையின் விதிகளின்படி, உங்கள் சேமிப்புக் கணக்கில் ஒரு நிதியாண்டில் நீங்கள் டெபாசிட் செய்யும் மொத்த ரொக்கத் தொகை ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தத் தகவலை வங்கிகள் கட்டாயமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
கணக்கிடும் முறை: இது ஒரே முறையில் செலுத்தப்படும் தொகை அல்ல. ஒரு ஆண்டில் நீங்கள் பலமுறை செலுத்தும் சிறு தொகைகளின் மொத்தக் கூடுதல் ரூ.10 லட்சத்தைத் தாண்டினால், அது 'குறிப்பிடத்தக்க நிதிப் பரிவர்த்தனை' (SFT) என வகைப்படுத்தப்படும்.
பான் (PAN) கட்டாயம்: 2026 புதிய விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் உங்கள் மொத்த வைப்பு ரூ.10 லட்சத்தைத் தாண்டும்போது, வங்கிகள் உங்கள் பான் எண்ணை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.