வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (FD)-இல் முதலீடு செய்யும்போது, அதிக வட்டி விகிதத்தை விட உங்கள் பணத் தேவை மற்றும் காலக்கெடுவுக்கு ஏற்பத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம்.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit - FD) நம்பகமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், பலரும் FD திட்டத்தைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இருப்பினும், FD திட்டத்தில் முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்கள் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
நமக்கு ஏற்ற FD திட்டம் எது, நம்முடைய இலக்கு மற்றும் தேவை என்ன, அதற்கான சிறந்த FD திட்டம் எது என்பதை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே FD திட்டத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. நமக்கு எப்போது பணம் தேவைப்படும் என்பதைக் கருத்தில் கொள்வதே மிக முக்கியமானதாகும்.
24
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
உங்களுக்கு 2 வருடங்களில் பணத் தேவை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். ஆனால், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 வருட FD-இல் பணத்தை முதலீடு செய்தால், இடையில் FD-ஐ உடைக்கும் சூழல் ஏற்படும். அவ்வாறு முன்கூட்டியே உடைக்கும்போது உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, 2 வருடத்தில் வீடு கட்டுவது அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்காக உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால், 2 வருடத்தில் முதிர்வுத் தொகை கிடைக்கும் FD திட்டத்தையே தேர்ந்தெடுக்கலாம். மேலும், எப்போதும் நீண்ட கால FD திட்டங்களுக்குத்தான் அதிக வட்டி கிடைக்கும் எனக் கூற முடியாது. சில சமயங்களில் 5 வருட FD-ஐ விட 2 வருட FD-க்கு அதிக வட்டி கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
34
சரியான FD கால அளவை தேர்ந்தெடுக்கும் விதிகள்
தேவை & காலக்கெடு - வங்கி FD-இல் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு, இந்தப் பணம் எதற்காக, எப்போது தேவைப்படும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அடுத்த 1 வருடத்தில் பணம் தேவை என்றால், 3 ஆண்டு FD-க்கு கிடைக்கும் கூடுதல் 0.50% வட்டிக்கு ஆசைப்படாமல், நேரடியாக 1 ஆண்டு FD திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
முன்கூட்டியே எடுத்தால் அபராதம் - பெரும்பாலான வங்கிகள் முதிர்வு தேதிக்கு முன்னர் FD-ஐ உடைத்தால், அந்தக் குறிப்பிட்ட கால அளவிற்குரிய வட்டி விகிதத்தில் இருந்து 0.50% முதல் 1% வரை குறைவான வட்டியை வழங்குகின்றன. உதாரணமாக, 7% வட்டியில் 3 ஆண்டு FD போட்டு, அதனை ஓராண்டுக்குள் உடைத்தால், 1 ஆண்டிற்கான வட்டி விகிதம் 6% எனில், அதில் 1% அபராதம் விதிக்கப்பட்டு 5% வட்டி மட்டுமே கிடைக்கும்.
உங்களிடம் ரூ.5 லட்சம் சேமிப்பு இருந்தால், அதனை ஒரே FD-இல் முதலீடு செய்யாமல், தலா ரூ.1 லட்சம் என 5 வெவ்வேறு FD-களில் (1 ஆண்டு, 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் என) பிரித்து முதலீடு செய்யலாம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு FD முதிர்வு அடைந்து பணம் கைக்கு வரும்; அதேவேளையில் மீதமுள்ள தொகைக்குத் தொடர்ந்து வட்டியும் கிடைக்கும்.
அவசர கால நிதி மற்றும் பாதுகாப்பு - அவசர கால நிதியை எளிதில் எடுக்கும் வகையில் வைத்திருப்பது அவசியமாகும். அவசர கால நிதியை லாக்-இன் (Lock-in) அல்லது Non-Callable FD திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம். எந்த ஒரு வங்கியில் FD போட்டாலும், DICGC கீழ் காப்பீடு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், முன்கூட்டியே பணத்தை எடுக்கும் விதிகளை முழுமையாகத் தெரிந்துகொள்வதும் அவசியமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.