வரும் செப்டம்பர் 30, 2025-க்குள் ரூ. 500 நோட்டுகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெரிவித்துள்ளது. இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அது எச்சரித்துள்ளது.
2016-ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது. கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. ATM வாசல்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இந்தச் சூழலில், மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குத் தயாராகுமாறு சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
24
வதந்தி என்ன?
வாட்ஸ்அப்பில் பரவி வரும் ஒரு தகவலில், "ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30, 2025-க்குள் ATM-களில் ரூ. 500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்தும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
75% ரூ. 500 நோட்டுகளின் புழக்கத்தை அக்டோபர் 2025-க்குள் குறைக்க வேண்டும் என்றும், 90% புழக்கத்தை மார்ச் 2026-க்குள் குறைக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ATM-களில் இனி ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்றும், எனவே பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள ரூ. 500 நோட்டுகளைச் செலவழித்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
34
மத்திய அரசு விளக்கம்
இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என்பதை மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) உறுதி செய்துள்ளது. ஆகஸ்ட் 3, 2025 அன்று, PIB Fact Check தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ரூ. 500 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லும்" என்று ஒரு பதிவை வெளியிட்டு, இந்த வதந்தியைப் பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி (RBI) இதுபோன்று எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை, ரிசர்வ் வங்கி இதுபோன்ற ஒரு முக்கிய முடிவை எடுத்தால், அது தனது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஊடகங்கள் மூலம் மட்டுமே அறிவிக்கும். சமூக வலைதளங்களில் பகிரப்படும் இது போன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என PIB கேட்டுக்கொண்டுள்ளது.
அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லாத செய்திகளை நம்ப வேண்டாம். https://pib.gov.in போன்ற நம்பகமான அரசு வலைத்தளங்களில் தகவல்களைச் சரிபார்க்கவும். @PIBFactCheck போன்ற அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளைப் பின்தொடரவும்.
செய்தியைப் பகிர்வதற்கு முன், நிபுணர்களிடமோ அல்லது நம்பகமான தளங்களிலோ தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
பணத்தைப் பற்றிய போலிச் செய்திகள் தேவையில்லாத பீதியைக் கிளப்பும். 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களை நாம் மறக்க முடியாது. எனவே, இதுபோன்ற செய்திகளைப் பகிர்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொள்வது அவசியம்.