EPF வட்டி விகிதம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இந்த செய்தி குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025-26 நிதியாண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டிய ஆண்டு வட்டி விகிதத்தை 8.25% ஆக மத்திய அரசு தக்கவைத்துள்ளது என்று இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) EPF-ன் 239வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
24
மூன்று நிதியாண்டுகளாக தொடரும் வட்டி விகிதம்
EPF வட்டி விகிதத்தை பொறுத்தவரை கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளிலும் இதே 8.25% வட்டிதான் வழங்கப்பட்டது. இப்போதும் மூன்றாவது நிதி ஆண்டாக இதே வட்டி விகிதம் தொடர்கிறது. இந்த முடிவின் மூலம் சுமார் 7 கோடிக்கும் அதிகமான பி.எஃப் (PF) சந்தாதாரர்கள் பயனடைவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இப்போது CBT கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
34
பிஎஃப் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்?
நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பின்பே பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் வட்டி விகிதம் வரவு வைக்கப்படும். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், EPFO வலுவான நிதி ஒழுக்கத்தை கடைப்பிடித்து, வட்டி கணக்கிற்கு எந்தவித அழுத்தமும் இல்லாமல் நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வருமானத்தை உறுதி செய்துள்ளது. இந்த முடிவு கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதிய பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு பயனளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய விஷயமாக மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) கூட்டத்தில் செயல்பாட்டில் இல்லாத (Inoperative) பி.எஃப் கணக்குகளில் 1,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள நிலுவைத் தொகையைத் தானாகவே செட்டில் செய்யும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் பிஎஃப் கணக்கு வைத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.