இந்த அறிக்கையின்படி, முக்கிய நகரங்களில் சராசரி வீட்டு விலை முதல் முறையாக ஒரு சதுர அடிக்கு ₹10,000-ஐத் தாண்டி, இந்த காலாண்டில் ₹10,050 ஆக உயர்ந்துள்ளது. முன்னணி நகரங்களைப் பொறுத்தவரை, பெங்களூரு மிக வலுவான குடியிருப்பு சந்தையாக உருவெடுத்துள்ளது. அங்கு வீட்டு விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 33% அதிகரித்து 15,603 யூனிட்டுகளாக உள்ளது. குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள் (GCC) மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் தொடரும் வேலைவாய்ப்புகளே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
வருடாந்திர வளர்ச்சியில் மந்தநிலை
"2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில் பெங்களூரு மூன்று முக்கிய பரிமாணங்களிலும் சிறந்து விளங்குகிறது," என்று கூறும் அறிக்கை, "நகரின் வேலைவாய்ப்பு சூழல், பெங்களூருவுக்கு ஒரு தனித்துவமான தேவையை அளிக்கிறது" என்றும் கூறுகிறது. மும்பை பெருநகரப் பகுதி (MMR), விற்பனை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டிலும் நாட்டின் மிகப்பெரிய வீட்டுச் சந்தையாகத் தொடர்கிறது. ஆனால், அதன் வருடாந்திர வளர்ச்சியில் சற்று மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்த காலாண்டில் MMR-ல் வீட்டு விற்பனை 26,116 யூனிட்டுகளாக இருந்தது, இது கடந்த ஆண்டை விட 14.9% குறைவு. புதிய விநியோகம் 13.2% குறைந்துள்ளது.