விவசாயிகளுக்கு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 கோடி கடன்: மத்திய அரசின் வேளாண் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

Published : Sep 25, 2026, 07:56 AM IST

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில்முனைவோர் சொத்து அடமானம் ஏதுமின்றி அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடனுதவி பெற முடியும். மத்திய அரசின் 3% வட்டி மானியத்துடன் வெறும் 6% வட்டியில் வழங்கப்படும் இக்கடனை 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்

PREV
16
விவசாயிகளுக்கு சொத்து அடமானமின்றி ரூ.2 கோடி கடன்

விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைத் தரம் குறையாமல் பாதுகாக்கவும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும், இயற்கை இடுபொருள் உற்பத்தி நிலையங்களை அமைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசால் 'வேளாண் உள்கட்டமைப்பு நிதி' (Agri Infrastructure Fund) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் எவ்வித சொத்து அடமானமும் இன்றி, குறைந்த வட்டியில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடனுதவி பெற முடியும்.

26
அறுவடைக்குப் பிந்தைய இழப்பைத் தடுக்க நடவடிக்கை

பூச்சி, நோய்த் தாக்குதல்கள் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளால் மகசூல் இழப்பைச் சந்திக்கும் விவசாயிகள், அறுவடைக்குப் பின்பும் உரிய வசதிகள் இல்லாததால் விளைபொருள்களில் சுமார் 30 சதவீதத்தை இழப்பதாக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (FAO) சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நபார்டு வங்கியின் ஆலோசனை நிறுவனமான 'நாப்கான்ஸ்' 2022-ல் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் அறுவடைக்குப் பிந்தைய இழப்பால் பாழாகின்றன.

இந்த இழப்பைக் குறைத்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் 2020-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுகுறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை.

36
பயனாளிகள் யார்? நிறுவக்கூடிய உள்கட்டமைப்புகள் என்ன?

மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் விவசாயிகள், வேளாண் ஆர்வலர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO), கூட்டுறவுச் சங்கங்கள், விற்பனைக் குழுக்கள், தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் (Startups) பயனடையலாம்.

ஒரே இடத்திலோ அல்லது வெவ்வேறு இடங்களிலோ அதிகபட்சமாக 25 வகையான உள்கட்டமைப்புகளை நிறுவிக் கொள்ள இத்திட்டம் வழிவகை செய்கிறது. விளைபொருள் சேமிப்புக் கிடங்கு, குளிர்பதனக் கிடங்கு, சிப்பம் கட்டும் கூடம், பகுப்பாய்வு மையம், தரம் பிரிப்புக் கூடம், பழுக்க வைக்கும் அறை, டிஜிட்டல் வர்த்தகத் தொழில்நுட்ப மையம், உணவுப் பதப்படுத்தும் மையம்.

46
நிறுவக்கூடிய உள்கட்டமைப்புகள் என்னென்ன?

மதிப்புக் கூட்டுதல்:

தானியங்களைச் சுத்தம் செய்தல், உலர வைத்தல், அரைத்தல் உள்ளிட்ட முதல்நிலைப் பதப்படுத்துதல் மற்றும் பிஸ்கட், பிரெட், பாஸ்தா, பழக்கூழ், சாஸ், ஜாம், அப்பளம், ஊறுகாய் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட இரண்டாம் நிலை உணவுப் பொருள்கள் தயாரிக்கும் பிரிவுகள்.

உற்பத்தி & இதர தொழில்நுட்பங்கள்:

இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையம், உயிர் உரம் உற்பத்திக் கூடம், பசுமைக் குடில், உயிரி எரிவாயு நிலையம், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வேளாண் தொழில்நுட்ப மையம், நாற்றங்கால், திசு வளர்ப்பு மையம், ஸ்பைருலினா உற்பத்தி, விதை சுத்திகரிப்பு மையம்.

துணைத் தொழில்கள்:

பட்டுப்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் தேன் பதப்படுத்துதல், காளான் வளர்ப்பு, ஹைட்ரோஃபோனிக்ஸ், ஏரோஃபோனிக்ஸ் அமைப்புகள், பண்ணைக் கருவிகள், உழவு-அறுவடை இயந்திரங்கள் மற்றும் சோலார் பம்ப்கள் வாங்குதல்.

56
கடன் வரம்பு & வட்டிச் சலுகைகள் என்னென்ன?

அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இக்கடனுக்கு வங்கிகள் நிர்ணயிக்கும் 9% வட்டியில், 3% வட்டியை மத்திய அரசு மானியமாக ஏற்கிறது. இதனால் பயனாளர்கள் 6% வட்டி மட்டும் செலுத்தினால் போதுமானது. சொத்து அடமானம் ஏதும் தேவையில்லை; எந்த உள்கட்டமைப்புக்காகக் கடன் பெறப்படுகிறதோ, அந்த உள்கட்டமைப்பே கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை பிணையாக எடுத்துக்கொள்ளப்படும்.

கடன் திருப்பிச் செலுத்த 7 ஆண்டுகள் அவகாசம் உண்டு. தொழில் தொடக்க நிலைக்கு ஏற்ப 6 முதல் 24 மாதங்கள் வரை வட்டி விடுமுறை (Moratorium) அளிக்கப்படும். இவ்வட்டித் தொகையைத் தொழில் தொடங்கிய பின்வரும் தவணைகளில் பகிர்ந்தளித்துப் பயனாளர்கள் செலுத்திக் கொள்ளலாம்.

கூடுதல் திட்ட மானியங்கள்:

மத்திய அரசின் பி.எம்.எஃப்.எம்.இ (PMFME), எஸ்.எம்.ஏ.எம் (SMAM), பி.எம்.இ.ஜி.பி (PMEGP) ஆகிய திட்டங்களுடன் இதனை இணைத்துப் பலன் பெறலாம். குறிப்பாக, உணவு பதப்படுத்தும் மையங்கள் அமைக்க PMFME திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்றுக்கொள்ள முடியும்.

66
விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டம் மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட வளப்பயிற்றுநர்களை (DRP - District Resource Person) அணுகி விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.

பின்னர், agriinfra.dac.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திட்ட அறிக்கை மற்றும் கடன்பெற விரும்பும் வங்கி விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். இதனைப் பரிசீலிக்கும் திட்ட ஒப்புதல் குழு (PAC), வங்கிகளுக்குப் பரிந்துரைக்கும். விண்ணப்பித்த 45 நாள்களுக்குள் வணிக வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்), கூட்டுறவு வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி உள்ளிட்ட மண்டல ஊரக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்படும்.

கடன் வழங்கப்பட்ட பின்னர், மத்திய அரசின் 3% வட்டி மானியம் 4 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி தொழில்முனைவோராக உருவெடுத்துப் பொருளாதாரத்தில் மேன்மையடைய வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories