ATM Card Rules
எல்லா இடத்திலும் டிஜிட்டல் பேமெண்ட் வசதி வந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட சில நேரங்களில் ரொக்கப் பணம் தேவைப்படுகிறது. அதைத் தவிர்க்க முடியாது. UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ச்சியாக அதிகரித்தாலும், ரொக்கப் பணத்தைப் பயன்படுத்த விரும்பும் மக்கள் அதிக அளவு இன்னும் உள்ளனர். அவர்களுக்காக ஏடிஎம் இயந்திரங்களும் அதிக அளவில் வந்துவிட்டதால், பணம் கிடைப்பதும் மிகவும் எளிதாக உள்ளது.
ATM Cash Withdrawal Rules
ஆனால், அனைத்து வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சில வரம்புகளை விதித்துள்ளன. ஏடிஎம்மில் இருந்து தினமும் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பது குறித்து வங்கி விதிகள் உள்ளன. ஒவ்வொரு வங்கியின் விதிமுறையும் மாறுபடுகிறது. சில முக்கிய வங்கிகளின் விதிப்படி, ஏடிஎம்மில் தினசரி எவ்வளவு ரொக்கம் எடுக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
SBI ATM cash withdrawal limit
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான நிதிச் சேவைகளை வழங்குகிறது. பல்வேறு வகையான ஏடிஎம் கார்டுகளையும் வழங்குகிறது. இந்த கார்டுகளில் பணம் எடுக்கும் வரம்பும் மாறுபடுகிறது.
கிளாசிக் டெபிட் கார்டு அல்லது மேஸ்ட்ரோ டெபிட் கார்டில் இருந்து தினசரி பணம் எடுக்கும் வரம்பு ரூ.20,000. எஸ்பிஐ பிளாட்டினம் இன்டர்நேஷனல் டெபிட் கார்டுகள் மூலம் ஒரு நாளில் ரூ.1 லட்சம் ரொக்கமாக எடுக்கலாம். SBI GO இணைக்கப்பட்ட டச் டேப் டெபிட் கார்டுக்கான தினசரி வரம்பு ரூ.40,000.
மெட்ரோ நகரங்களில் எஸ்பிஐ கார்டுதாரர்கள் மாதம் 3 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். மற்ற நகரங்களில், 5 முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம். இந்த வரம்பை கடந்த பிறகு, எஸ்பிஐ ஏடிஎம்களில் 5 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களில் 10 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
PNB ATM Cash withdrawal limit
மற்றொரு பெரிய பொதுத்துறை வங்கியான பிஎன்பி வங்கியின் வாடிக்கையாளர்கள் PNB பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருந்தால் தினமும் ரூ.50,000 எடுக்கலாம். PNB கிளாசிக் டெபிட் கார்டு மூலம் அதிகபட்சம் ரூ.25,000 வரை எடுக்கலாம்.
கோல்ட் டெபிட் கார்டை வைத்து தினசரி ரூ.50,000 எடுத்துக்கொள்ளலாம்.
PNB கார்டுதாரர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது, மும்பை, புது தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களில் மாதம் தோறும் மூன்று இலவச பரிவர்த்தனைகளை (நிதி மற்றும் நிதி அல்லாதவை) மேற்கொள்ளலாம். மற்ற நகரங்களில் ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாகச் செய்யலாம்.
HDFC Bank ATM Cash withdrawal limit
ஹெச்டிஎஃப்சி வங்கி டெபிட் கார்டு பயனர்கள் ஐந்து இலவச பரிவர்த்தனைகளைப் பெறுகிறார்கள். அதன் பிறகு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டில் பணம் எடுப்பதற்கு ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Millenia டெபிட் கார்டில் தினசரி பணம் எடுக்கும் வரம்பு ரூ.50,000, MoneyBack டெபிட் கார்டில் ரூ.25,000 மற்றும் ரிவார்ட்ஸ் டெபிட் கார்டில் ரூ.50,000 தினசரி வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Axis Bank ATM Cash withdrawal limit
ஆக்சிஸ் வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு ஒரு நாளைக்கு ரூ.40,000. பணம் எடுக்கும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Bank of Baroda ATM Cash withdrawal limit
பேங்க் ஆஃப் பரோடாவின் BPCL டெபிட் கார்டிலிருந்து ஒரு நாளில் ரூ.50,000, மாஸ்டர் கார்டு DI பிளாட்டினம் டெபிட் கார்டில் இருந்து ரூ.50,000 மற்றும் மாஸ்டர் கார்டு கிளாசிக் DI டெபிட் கார்டில் இருந்து தினமும் ரூ.25,000 பண்ணம் எடுக்கலாம்.