Road Safety Report: சமீபத்தில் வெளியான 'இந்தியா சாலைப் பாதுகாப்பு அறிக்கை-2026' ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைப் போட்டுடைத்துள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வண்டி ஓட்டுவதுதான் மிகவும் ஆபத்தானது. அது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 'ஜூனோ ஜெனரல் இன்ஷூரன்ஸ்' வெளியிட்ட 'இந்தியா சாலைப் பாதுகாப்பு அறிக்கை-2026' (IRSR) படி, இரவு 9 மணி முதல் 10 மணி வரை வண்டி ஓட்டுவதுதான் மிகவும் ஆபத்தான நேரம் எனத் தெரியவந்துள்ளது.
25
காரணம் என்ன தெரியுமா?
இந்த அறிக்கைப்படி, 80% விபத்துகளுக்குச் சாலையின் நிலையை விட, ஓட்டுநர்களின் நடத்தையும், பழக்கவழக்கங்களுமே முக்கியக் காரணம். இரவு 8 மணிக்கு மேல் ஓட்டுநர்களின் கவனம் சிதறுவதால், இந்த நேரத்தில் விபத்துகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை வண்டி ஓட்ட மிகவும் பாதுகாப்பான நேரம்.
35
பெண்கள் பெஸ்ட்
பெண்கள் ஆபத்தான முறையில் வண்டி ஓட்டுவார்கள் என்ற பொதுவான நம்பிக்கையை இந்த அறிக்கை உடைத்துள்ளது. பெண் ஓட்டுநர்களின் சராசரி டிரைவிங் ஸ்கோர் 92.86% ஆகவும், ஆண்களின் ஸ்கோர் 92.43% ஆகவும் உள்ளது. இதன்மூலம், ஆண்களை விட பெண்கள் ஓட்டுவதில் சற்று கவனமாக இருப்பது தெரிகிறது. ஜூனோ நிறுவனத்தின் 'ஸ்மார்ட் டிரைவ்' ஆப் மூலம் 17 மாநிலங்களில் சுமார் 45 லட்சம் பயணங்களின் டேட்டாவை ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
இந்திய ஓட்டுநர்களிடம் காணப்படும் மிகப்பெரிய பலவீனம், சரியான நேரத்தில் பிரேக் பிடிக்காததுதான். இதற்கு வெறும் 87 ஸ்கோர் மட்டுமே கிடைத்துள்ளது. அதோடு, அதிவேகமாகச் செல்லும்போது திடீரென வேகத்தை இன்னும் அதிகரிப்பதும் விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மழைக்காலம் அல்லது குளிர்காலப் பனி போன்ற வானிலை மாற்றங்கள், ஒட்டுமொத்த டிரைவிங் ஸ்கோரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதாவது, வானிலையை விட ஓட்டுநரின் முடிவுகளே இங்கு முக்கியம்.
55
பயங்கரமான புள்ளிவிவரங்கள்
இந்த அறிக்கைப்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.73 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். உலகளாவிய சாலை விபத்து மரணங்களில் இந்தியாவின் பங்கு 11% ஆகும். இந்த விபத்துகளால் நாட்டின் ஜிடிபியில் (GDP) 3 முதல் 5% வரை பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மொத்த மரணங்களில் 44% இருசக்கர வாகன ஓட்டிகளும், 19% பாதசாரிகளும் இருப்பது கவலைக்குரிய விஷயம்.