இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் ஸிலோ எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு புதிய சிறப்பு பதிப்பு ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அறிமுகமான இந்த மாடல் Knight Plus Rani Edition என அறியப்படுகிறது. இந்த மின்சார ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.69,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இது வெறும் 999 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும் லிமிடெட் எடிஷன் மாடலாகும்.
Knight Plus மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த Rani Edition ஸ்கூட்டர், பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தனித்துவத்தை கொண்டாடும் வகையில் உள்ளது. குறிப்பாக நகரப் பயணங்களுக்கு ஏற்ற எளிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதியாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனித்துவமான பிங்க் நிற வடிவமைப்புடன் வெள்ளை நிற பேனல்கள் சேர்த்து இந்த ஸ்கூட்டர் ஸ்டைலான தோற்றத்தில் வெளியாகியுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரில் 1.8 kWh திறன் கொண்ட போர்டபிள் LFP பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.